கொரோனாவுக்கு சுய சிகிச்சை, நீராவி நுகர்தல் சிகிச்சை கூடாது. அரசின் அறிவிப்பை பாராட்டும் மருத்துவர்கள் சங்கம்.

By Ezhilarasan BabuFirst Published May 17, 2021, 3:28 PM IST
Highlights

எனவே, தமிழக அரசு , அறிவியல் ரீதியான நிரூபணமான மருத்துவ முறைகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்  பொதுமக்கள் நலன் கருதி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கொரோனாவிற்கு சுய சிகிச்சை செய்திடக்கூடாது. நீராவி நுகர்தல் சிகிச்சை முறை கொரோனா சிகிச்சைக்கு கூடாது’போன்ற தமிழக அரசின் அறிவிப்புகள் வரவேற்புக்குரியது. என இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையின் விவரம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவாமல் தடுத்தல், கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ளல், கொரோனாவிலிருந்து குணமாக கொரோனா வைரஸை கொல்லுதல் என்ற பெயரில் நீராவி நுகர்தல் சிகிச்சை முறை பரவிவந்தது. இந்த மருத்துவ முறை அறிவியல் அடிப்படையற்றது. நீராவி நுகர்தல் சிகிச்சை முறை கொரோனா பரவலையோ அல்லது கொரோனா வைரஸை கொல்லவோ பயன்படாது. 

மாறாக இது கொரோனா வைரஸ் பலருக்கும் மிக வேகமாக பரவும் வாய்ப்பையே ஏற்படுத்தும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கூறிவந்தது. இத்தகைய அறிவியல் பூர்வமற்ற முறைகளை கைவிட வேண்டும் என்றும் கோரிவந்தது. இந்நிலையில் தமிழக அரசு இத்தகைய மருத்துவ முறை கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி,  சுயமாக சிகிச்சைகளை பொதுமக்கள் மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் வெளியிட்டுள்ளது. இதை டாக்டர்கள் சங்கம் மனமாற வரவேற்கிறது. கொரோனாவை தடுப்பதற்கும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி காப்பதற்கும் அறிவியல் பூர்வமாக நிரூபணமான மருத்துவ நடைமுறைகளே உதவிகரமாக இருக்கும். இதை உலக நல நிறுவனம் வலியுறுத்தி கூறிவருகிறது. 

எனவே, தமிழக அரசு , அறிவியல் ரீதியான நிரூபணமான மருத்துவ முறைகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்  பொதுமக்கள் நலன் கருதி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மருத்துவக் கல்வி உட்பட கல்வியை காவிமயமாக்கும், கார்ப்பரேட் மயமாக்கும், கல்வியில் மாநில உரிமைகளை முற்றிலும் ஒழித்துக் கட்டும், குலக் கல்வி முறையை மீண்டும் திணிக்கும், சாதி அடிப்படையிலான பரம்பரை தொழிலை மறைமுகமாக ஊக்கப்படுத்தும், தேசிய கல்விக் கொள்கை 2020 யை நடைமுறைப் படுத்துவதற்கான  ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியது. பாராட்டுக்குரியது.  கல்வியில் மாநில உரிமையையும், சமூக நீதியையும் காக்கும் வகையில் தமிழக அரசு உறுதியுடன் செயல்படுவதை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மனமாற பாராட்டி வரவேற்கிறது. இவ்வாறி அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!