மன்னிப்பு கேட்டே ஆகனும்.. சூர்யா இல்ல, எமனாக இருந்தாலும் விடமாட்டேன்.. கொஞ்சம்கூட அடங்காத வ. கவுதமன்..

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2021, 12:07 PM IST
Highlights

இதைப் புரிந்து கொண்டு அந்த சூழ்ச்சி கும்பலுக்கு சூர்யா இரையாக கூடாது, சூர்யா தான் செய்தது தவறு என்று தெரிந்திருந்தும் அதற்கு மன்னிப்பு கேட்க தயங்குகிறார். இந்த விவகாரத்தில் யார் பின் வாங்கினாலும் நான் பின்வாங்க மாட்டேன், 

தவறு செய்து விட்டோம் என்று தெரிந்திருந்தும் சூர்யா மன்னிப்பு கேட்க தயங்குவது ஏன் என்றும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டேன் என்றும் இயக்குனர் வ. கௌதமன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் யார் பின்வாங்கினாலும் நான் சூர்யாவை விடப்போவதில்லை என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக மற்றும் வன்னியர் சங்கம் பல்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியும் வரும் நிலையில் கௌதமன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடி இணையத் தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்..  இருளர் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் வேண்டுமென்றே வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் அவர்களின் அடையாள குறியான அக்னிசட்டி இடம்பெற்றுள்ளது என்றும், அதேபோல் வில்லனாக வரும் காவலருக்கு திட்டமிட்டு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்  என்றும் வலியுறுத்தி வருவதுடன்,  5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சூர்யா-பாமக மோதல் தமிழகத்தில் பூதாகரமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலிருந்தே இரண்டு தமிழ் சமூகங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் நோக்கில் இந்த காட்சிகள் திரைப்படத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும், காலம்காலமாக வடமாவட்டங்களில் பகைபாராட்டி வரும் இரண்டு சமூகங்களுக்கு இடையே மேலும் பகையை மூட்ட வேண்டாம் என்ற நோக்கில் இந்த செயல் செய்யப்பட்டுள்ளது என்றும் இயக்குனர் வ. கௌதமன் விமர்சித்துவருகிறார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், நான் எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோஅது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த மண்ணுக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் இந்த மண்ணின் மக்களிடையே மோதலை உருவாக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில்தான் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அந்த குறிப்பிட்ட காட்சி வைக்கப்பட்டுள்ளது.

எந்த வரண்முறையும் இன்று எவரெவரோ படம் எடுத்து விட்டு போய் விட்கிறார்கள் அதனால் பட்டியல் இன மக்களும், வன்னிய மக்களுக்கும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யாவின் பதில் முறையாக இல்லை.. அதில் அவர் தனது கோபத்தைதான் வெளிப்படுத்தியிருந்தார். ஒரு வீரம் செறிந்த சமூகம் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக கூறி வலியுடன் நிற்கிறது. இவ்வளவு பேர் இத்தனை கோரிக்கைகள் வைக்கிறோம் ஆனால் அவர் இதுவரையில் மௌனம் காத்து வருகிறார். நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், இப்போது வன்னியர்களுக்கு எதிராக சூர்யாவை கொம்பு சீவுபவர்கள் விரைவில் அவரை விட்டு ஒதுக்கி விடுவார்கள், விரைவில் சூர்யா தனி ஆளாக நிற்பார் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். சில நூற்றாண்டுகளாகவே இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் வடக்கே வன்னியர்கள்- பட்டியல் சமூகத்தினரை அடித்துக்கொள்ள வைப்பதோடு மட்டுமல்லாமல் தெற்கே தேவர்கள்- தேவேந்திரகுல வேளாளருக்கும் இடையே கலவரத்தை தூண்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

இப்போது மோதிக்கொள்ளும் எங்கள் இரண்டு சமூகங்களும் ஒன்று சேர்ந்து எங்கள் எதிரிகளை விரட்டி அடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன். இதைப் புரிந்து கொண்டு அந்த சூழ்ச்சி கும்பலுக்கு சூர்யா இரையாக கூடாது, சூர்யா தான் செய்தது தவறு என்று தெரிந்திருந்தும் அதற்கு மன்னிப்பு கேட்க தயங்குகிறார். இந்த விவகாரத்தில் யார் பின் வாங்கினாலும் நான் பின்வாங்க மாட்டேன், எவனாக இருந்தாலும் அது எமனாக இருந்தாலும் நான் விட மாட்டேன். சூர்யாவை பகிரங்க மன்னிப்பு கேட்கும்வரை நான் விடமாட்டேன் என அவர் பகிரங்கமாக கூறியுள்ளார். மற்றவர்களைப் போல அடிப்பேன் உதைப்பேன் என்று வன்முறையை பேசவில்லை அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் விடமாட்டேன் என்றுதான் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!