சிம்லாவில் ஹெலிகாப்டர் முன்னாடி கெத்தா போஸ் கொடுத்த அப்பாவு… சபாநாயகர் மாநாட்டில் பங்கேற்பு!!

By Narendran SFirst Published Nov 17, 2021, 11:43 AM IST
Highlights

சிம்லாவில் நடைபெற்று வரும் சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற அப்பாவு, அங்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் பிரத்யேக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். 

ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக கடந்த நவம்பர்15 ஆம் தேதி மதுரையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்ற சபாநாயகர் அப்பாவு, அங்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவை எதேச்சையாக சந்தித்துள்ளார். பின்னர் டெல்லியிலிருந்து சண்டிகருக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் விமானத்தில் ஒன்றாக பயணித்த அப்பாவு, அப்போதுபல்வேறு உலக நடப்புகள் பற்றி விரிவாக பேசியிருக்கிறார். இந்நிலையில் சண்டிகர் விமான நிலையத்திலிருந்து சிம்லாவுக்கு செல்ல ஓம் பிர்லாவுக்கு பிரத்யேக ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தது. அப்பாவுவை பிக் அப் செய்ய சிம்லா அரசு கார் அனுப்பியிருந்தது. அப்பாவு காருக்காக காத்திருந்ததை பார்த்த ஓம் பிர்லா, ஏன் இங்கு காத்திருக்கிறீர்கள் என்னோடு வாருங்கள் என கூறி ஹெலிகாப்டரில்  அப்பாவுவையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். இதை அடுத்து ராஜஸ்தான் சபாநாயகர், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆகிய மூவர் மட்டும் பிரத்யேக ஹெலிகாப்டரில் சிம்லா சென்றடைந்தனர். சபாநாயகர் அப்பாவுவுடன் சட்டமன்றச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 4 பேர் சிம்லாவுக்கு சென்றிருக்கின்றனர்.

சந்தித்து பேசிய சில மணி நேரங்களில் ஒரு மாநில சபாநாயகருக்கு நாடாளுமன்ற சபாநாயகருடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்பது அப்பாவுவின் பேச்சாற்றலையும் புத்திக்கூர்மையும் காட்டுகிறது. இதனிடையே நேற்று சபாநாயகர்கள் நிலைக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று பிரதமர் மோடி அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, ஜனநாயகம் என்பது இந்தியாவின் இயல்பு மற்றும் அதன் இயல்பான போக்கு ஆகும். நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாம் தனிச்சிறப்புடன்  கூடிய இலக்குகளை அடைய வேண்டும். ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் மட்டுமே இது நிறைவேறும். ஜனநாயகத்தில் அனைவரின் முயற்சிகளைப் பற்றி நாம் பேசும்போது, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில், அனைத்து மாநிலங்களின் பங்கும் அதன் முக்கிய அடித்தளமாகும். கடந்த சில ஆண்டுகளில் அனைவரின் முயற்சியால் எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு மிகப்பெரிய உதாரணம் கொரோனா. அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு எதிரான போரை ஒற்றுமையாக நடத்தியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இன்று இந்தியா 110 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி மைல்கல்லை கடந்துள்ளது.

ஒரு காலத்தில் சாத்தியமில்லை என்று நினைத்த ஒன்று, இப்போது சாத்தியமாகிறது என்று தெரிவித்தார்.  இந்த மாநாட்டில், இந்த அமைப்பின் நூற்றாண்டுப் பயணம்-மதிப்பீடு, முன்னோக்கிச் செல்லும் வழிகள், அரசியலமைப்பு, அவையை நடத்துதல், மக்கள் மீதான பொறுப்பு ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை, நாடாளுமன்ற அவைகளில் ஒழுக்கமும் கண்ணியமும் படிப்படியாக சிதைந்து வருவது கவலைக்குரிய விஷயம் என்பதால் சிம்லா மாநாடு இதைப் பற்றி சிந்திக்கும் என கருதப்படுகிறது. குறிப்பாக கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுவான அமைப்பை ஏற்படுத்தவும், அவைத் தலைவர்களின் அதிகாரங்கள், வரம்புகளை வகைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. மேலும், நாடாளுமன்றக் குழுக்களின் செயல்பாட்டிற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!