டெல்டா மாவட்டங்களை நாசமாக்க முனையும் ஷேல் எரிவாயுத் திட்டம் - உங்கள் நிலைபாடு என்ன மோடி, ஒபிஎஸ்சுக்கு வைகோ கேள்வி

 
Published : Dec 20, 2016, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
டெல்டா மாவட்டங்களை நாசமாக்க முனையும் ஷேல் எரிவாயுத் திட்டம் - உங்கள் நிலைபாடு என்ன மோடி, ஒபிஎஸ்சுக்கு வைகோ கேள்வி

சுருக்கம்

தமிழக டெல்டா பிரதேசத்தை நாசமாக்க முனையும் ஷேல் எரிவாயுத் திட்ட வழக்கில் மத்திய-மாநில அரசுகள் கருத்தை பதிவு செய்யாமல் இழுத்தடிக்கின்றன என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் ஆபத்தை உண்டு பண்ணும் ஷேல் கேஸ் எனும் பாறை படிம எரிவாயு குறித்த வழக்கு இன்று 2016 டிசம்பர் 20 தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தொடர்ந்து பங்கேற்று வருகிற வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“தமிழ்நாட்டுக்கு குறிப்பாக சோழ மண்டலத்துக்கு இடிமேல் இடியாக ஆபத்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே உள்ளன. காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் பேராபத்து, மத்திய அரசு கொண்டுவர முனைந்த மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் பேராபத்து, இன்றைய தமிழக அரசு மீத்தேனை விரட்டி அடித்தபோதிலும், திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக இல்லை. 

மீத்தேனைவிட பேராபாயத்தை ஏற்படுத்தும் ஷேல் கேஸ் எனப்படும் பாறை படிம எரிவாயு திட்டத்தை மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தத் துடிக்கிறது.

மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன்பு  ஒரு நிகழ்ச்சியில் ஷேல் கேஸ் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று கூறிவிட்டு, அதே நாளில் இன்னொரு இடத்தில் ஷேல் கேஸ் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.

மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கொள்கை வழிகாட்டும் ஆணையில் ஷேல் கேஸ் திட்டம் தமிழ்நாட்டில், காவிரி படுகையில் குத்தாலம் பகுதியில் நிறைவேற்றப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை ரத்து செய்து, கொள்கை முடிவை மத்திய அரசு அறிவித்தால்தான் ஷேல் கேஸ் திட்டத்தை நாம் தடுக்க முடியும்.

கடந்த அமர்வில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த விவாதத்தை நான் முன்வைத்தபோது, நீதி அரசர் ஜோதிமணி அவர்கள் மத்திய அரசு தன் நிலைப்பாட்டை பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இன்று தீர்ப்பாயத்தில் மத்திய அரசு சார்பில், கருத்துச் சொன்ன வழக்கறிஞர் பொத்தாம் பொதுவாக ஷேல் கேஸ் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறினார். 

இதனை நாங்கள் ஏற்கவில்லை. அதைப்போலவே தீர்ப்பாயத்தின் கடந்த அமர்வில் தமிழ்நாடு அரசு ஷேல் எரிவாயு பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று நான் முன்வைத்த கருத்தை நீதியரசர் ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இருந்தபோதிலும் தமிழ்நாடு அரசு தன் கருத்தை தெரிவிக்கவில்லை.

எனவே இந்த வழக்கு விசாரணையை நீதியரசர் ஜோதிமணி, சுற்றுச் சூழல் நிபுணர் ராவ் அவர்கள் அமர்வு 2017 பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அறிவித்தது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!