ஊடகங்களை மிரட்டியே வைத்திருந்தவர்... ஆனால் பத்திரிகைப் பணியை விரும்பினார்... அதுதான் ஜெயலலிதா!

First Published Dec 5, 2017, 7:05 PM IST
Highlights
she was intimidated the media but wanted journalism that is the jayalalitha


தமிழகத்தின் இரும்பு மனுஷி என்று சொல்லும் அளவுக்கு ஊடகங்களால் பெரும்பாலும் வெறுக்கப்பட்டாலும், மக்களால் விரும்பப்பட்டவராக இருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இலவசத் திட்டங்களால், ஏழை மக்களுக்கு பயனளிக்கும் பல திட்டங்களால் அவர் மக்களின் மனங்களில் இருந்திருந்தாலும், தன் இரும்புக் கரங்களால் ஊடகங்களைக் கட்டியே வைத்திருந்தார். 

எத்தனை எத்தனை வழக்குகள்? வழக்குகளும் மிரட்டலும் ஒருபுறம் இருந்தாலும், ஊடகங்கள் தொய்வின்றி நடத்தப்பட முக்கியக் காரணமாக இருக்கும் வருவாய்ப் பிரிவில் கையை வைத்திருக்கிறார். விளம்பரதாரர்களை மிரட்டியதாகக் கூறப்படுவது ஒருபுறம் என்றால், நேரடியாக அரசின் விளம்பரங்கள் தன்னை எதிர்க்கும் ஊடகங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொண்டு மிரட்டுவதிலும் அவர் ஈடுபட்டதாகக் கூறுவர். இப்படி, தங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காமல் நீதிமன்றத்தை அணுகி முறையீடு செய்த செய்தி நிறுவனங்களும் தமிழகத்தில் உண்டு.

இப்படி ஊடகங்களைக் கட்டுப்படுத்தி, செய்தியாளர்களைக் கட்டுப்படுத்தி, எல்லாவற்றிலும் தன் அதிகாரத்தைச் செலுத்திய ஜெயலலிதா, தானே ஓர் ஊடகத்தில் பணியாற்ற விருப்பம் கொண்டிருந்தார் என்பது அவரது முரண்பட்ட முகத்தைக் காட்டும்! 

மூத்த பத்திரிகையாளர் மணா இதுகுறித்து எழுதியுள்ள பதிவு...

1980 க்குப் பிறகு அவர் திரைத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த சமயம். பல பத்திரிகைகளில் எழுதி வந்தார். துக்ளக்-கில் தொடர் கட்டுரைகளை எழுதினார். குமுதம் இதழிலும், தாய் இதழிலும் தொடர்கதைகள் எழுதினார்.

அந்தச் சமயத்தில் சென்னையிலிருந்து ‘’ மேகஸின் ஆஃப் மெட்ராஸ்’’ என்கிற அடிக்குறிப்புடன் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகை ‘ அஸைட்’.
அதன் நிர்வாக ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்தவர் ஆபிரஹாம் இராலி. கேரளாவைச் சேர்ந்தவர். பத்திரிகை மீது அவ்வளவு ஈடுபாடு. ரசனை. லேஅவுட்டிலும், உள்ளடக்கத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். அட்டைப்படம் நேர்த்தியாக இருக்கும்.

அப்போது அந்த நிறுவனத்திலிருந்து ‘’செய்தி ஒலி’’ என்கிற தமிழ் இதழ் ஆரம்பிப்பதாக இருந்தார்கள். அதற்காக நண்பர் பிரபஞ்சனும், நானும் அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.

அந்த இதழின் தீவிர வாசகியாக இருந்தார் ஜெயலலிதா. அதன் ஆசிரியரான திருமதி ஜானகி வெங்கட்ராமனுடன் அவருக்குத் தொடர்பிருந்தது.
ஒரு நாள் ஜெயலலிதா அஸைட் பத்திரிகையில் சப்-எடிட்டராகப் பணியாற்றுவதற்காக விண்ணப்பித்திருந்ததாக அலுவலகம் முழுக்கப் பேச்சாக இருந்தது. விசாரித்தபோது அது உண்மை தான் என்று தெரிய வந்தது.

சப் எடிட்டராகப் பணியாற்றுகிறேன். ஆனால் நந்தனத்தில் இருந்த ஆபிஸூக்கு வராமல், வேதா இல்லத்தில் இருந்த படியே பணியாற்றுகிறேன் என்றார் ஜெ. அதற்கு ஆபிரஹாம் இராலி ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு அவருடைய கவனம் அரசியல் பக்கம் திரும்பியது.

இருந்தாலும் அஸைட் பத்திரிகை மீது இருந்த விருப்பம் குறையவில்லை. அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டு, பிரச்சாரத்தில் இறங்கிய நேரத்தில் அஸைடில் அவருடைய மிக விரிவான மனம் திறந்த பேட்டி வெளியாகி இருந்தது.

பேட்டி கண்டவர் ஆபிரஹாம் இராலி.
எம்.ஜி.ஆரைப் பற்றிப் பல விஷயங்களை வெளிப்படையாகச் சொன்ன அந்தப் பேட்டியின் தலைப்பு .
’’ அவர்கள் என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்’’

ஒருவேளை ஜெயலலிதா விரும்பிய படி பத்திரிகைத் துறையில் இணைந்திருந்தால் அவருடைய வாழ்க்கை வேறு திசையில் திரும்பியிருக்கூடும்.
ஆனால் பயணம் மாறிவிட்டது. திசையும் மாறிவிட்டது.
 

click me!