வேட்புமனுவில் போலி கையெழுத்து...! விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாயலாம்?

First Published Dec 5, 2017, 6:09 PM IST
Highlights
2 fake signatures on Vishal nomination


நடிகர் விஷால், தாக்கல் செய்த வேட்புமனுவில், முன்மொழிந்தவர்களில் 2 பேரின் கையெழுத்து போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதனால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை பாயலாம் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் சங்க நிர்வாகியாகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு தமிழ் திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. அந்நிலையில், விஷால் நேற்று தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்.

சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்யும் அதே நேரத்தில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் அவருக்கு எதிராக சேரன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதில் ஜெ.தீபாவின் மனுவில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யவில்லை என நிராகரிக்கப்பட்டது. நடிகர் விஷாலின் வேட்புமனு, தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அப்போது, விஷால் அளித்துள்ள உறுதிமொழி, சொத்து கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என்று கூறி அதிமுக மற்றும் திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்த நிலையில், விஷாலின் வேட்புமனுவை தேர்ந்த அதிகாரி வேலுசாமி நிராகரித்துள்ளார். விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்களை தவறாக குறிப்பிட்டுள்ளதற்காக வேட்புமனுவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் அளித்த வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை பாய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, விஷாலின் வேட்புமனு பரிசீலனையின்போது, மனுவில் சில சந்தேகங்கள் எழுந்ததால் அதன் மீதான பரிசீலனை சுமார் 3 மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இன்று மாலை 5 மணியளவில் விஷாலின் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

அப்போது, விஷாலின் வேட்புமனுக்களை முன்மொழிந்தவர்களின் 2 பேரின் கையெழுத்து போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்மொழிந்த 2 பேர், தேர்தல் அதிகாரியிடம் வந்து, இது தங்களின் கையெழுத்து அல்ல என்று சொன்னதை அடுத்து, அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அது மட்டுமல்லாது விஷால், தன்னுடைய பல்வேறு வங்கிக் கணக்குகளை மறைத்துள்ளதாகவும் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றும் நோக்கில் போலி கையெழுத்துக்களைப் போட்டுள்ளதால், விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை பாயலாம் என்று கூறப்படுகிறது.

click me!