
இதோ... அதோ... என போக்கு காட்டி வந்த டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்களின் பதவியை ஒட்டுமொத்தமாக காவு வாங்கிவிட்டார் சபாநாயகர் தனபால்.
சட்டப்பேரவை செயலாளர் க.பூபதி, இன்று வெளியிட்டுள்ள ஒரே அறிவிப்பின் மூலம், தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அதிக வாக்கைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள், முதலமைச்சரின் மீது புகார் அளித்ததற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
1986 சட்டமன்ற விதியின்படி, கட்சி மாறுதலுக்காக காவு வாங்கப்பட்ட இந்த எம்எல்ஏக்கள் தற்போது நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தால் மட்டுமே தப்பிக்க முடியும். இல்லை என்றால் பதவி போனது போனதுதான்!
தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் நேற்றே ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது அடிப்படையில், எடப்பாடி முந்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆளுநரிடம், முதலமைச்சர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறவில்லை என்றும் உட்கட்சி பூசல் என்றும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கட்சி மாறுதல் காரணம் கொண்டு இவர்களை தகுதி இழப்பு செய்திருப்பதாக 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டதாக சபாநாயகர் இன்று அறிவித்துள்ளதில் நெருடல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கை குறித்து பேட்டி அளித்த எதிர்கட்சி துணைத் தலைவரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன், அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக சாடி உள்ளார்.
சபாநாயகர் உத்தரவின்பேரில், சட்டப்பேரவை செயலாளரின் இந்த உத்தரவைப் பார்த்து, நான் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
திமுகவின் அடுத்த கட்டநடவடிக்கை என்னவாக இருக்கும் என செய்தியாளரின் கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த துரைமுருகன், சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளரின் நடவடிக்கை கேலிக்கூத்தாக உள்ளது என்றும் சாடியுள்ளார்.
தொடர்ந்து, எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி பதவியேற்ற நாளில் இருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிரச்சனைமேல் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் கருணாநிதி, ஆக்டிவாக இருந்திருந்தால் சந்தில் சிந்துபாடி எப்படியாவது ஒன்றை ஆட்சியை கவிழ்த்திருப்பார். அல்லது ஆட்சியைப் பிடித்திருப்பார் என்று திமுகவினரே பரவலாக பேசி வருகின்றனர்.
ஆனால், தற்போது தலைமைப் பதவி வகிக்கும் ஸ்டாலின், இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துரைமுருகனோ, வழவழ கொழகொழ என்ற ரீதியில் பொத்தம்பொதுவாக வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.