ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அவமானம்.. சிங்களவன் செய்யும் அதே தவறை தமிழகமும் செய்கிறது. கதறும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2021, 10:19 AM IST
Highlights

இதற்கெதிராகத் தங்களது நலவாழ்க்கையை உறுதி செய்யக்கோரி, பட்டனிப்போராட்டத்தை முன்னெடுத்து போராடி வரும் ஈழச்சொந்தங்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்திடாது அரசு அலட்சியப்படுத்தி வருவது தொடர் கதையாய் நீள்வது தமிழர்களின் கொடிய துயர நிலையை வெளிக்காட்டுகிறது. 

தமிழகமெங்கிலும் இருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதைக்கூடங்களை மூடி, ஈழச்சொந்தங்களுக்குப் பாதுகாப்பான நலவாழ்வையும், கௌரவமான வாழ்க்கைத்தரத்தையும் உருவாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:- 

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாம் எனப்படும் வதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 78 ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பட்டினிப்போராட்டம் நடத்தி வரும் செய்தியறிந்து மனவேதனையடைந்தேன். கொரோனா பெருந்தொற்றுப் பரவும் தற்காலப்பேரிடர் சூழலில்கூடக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இல்லாத வதை முகாம்களில் ஈழ உறவுகளை அடைத்து வைத்து மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. 

தங்களது நியாயமான கோரிக்கைகளை அறவழியில் முன்வைத்தும், அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தும், அதனை ஆளும் வர்க்கம் ஏற்காத நிலையில், தங்களைக் கருணைக்கொலை செய்துவிடுமாறு அவர்கள் வைத்திருக்கும் வேண்டுகோள் தாங்கொணாத் துயரத்தையும், தீரா மனவலியையும் தருகிறது. தமிழர்களின் தாயகமான தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இத்தகைய கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத அதிகாரமற்ற கையறு நிலையும் பெரும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளுகிறது. 

ஈழத்தாயகத்தில் நிகழ்ந்த பேரழிவால் உறவுகளைப் பறிகொடுத்து, உரிமைகளை இழந்து, உடைமைகளைத் தொலைத்து, நாடற்ற கொடுந்துயர நிலையில் தாய்த்தமிழகத்தை முழுவதுமாக நம்பி அன்னை நிலமெனக் கருதி அடைக்கலம் புக வரும் நிலையில் அவர்களைச் சந்தேகத்தின் பெயரில் வதை முகாம்களில் அடைத்து வைத்துக் கொடுமை செய்வதும், அவர்களது அடிப்படை உரிமைகளை மறுத்து, வாழவே விடாது வதைத்து வருவதும் நீண்டநெடுங்காலமாக நடைபெற்று வரும் பெருந்துயராகும். 

இதற்கெதிராகத் தங்களது நலவாழ்க்கையை உறுதி செய்யக்கோரி, பட்டனிப்போராட்டத்தை முன்னெடுத்து போராடி வரும் ஈழச்சொந்தங்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்திடாது அரசு அலட்சியப்படுத்தி வருவது தொடர் கதையாய் நீள்வது தமிழர்களின் கொடிய துயர நிலையை வெளிக்காட்டுகிறது. இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக, சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை மூடக்கோரிப் போராடியும் ஆளுகிற அரசுகள் அதனைச் செய்ய மறுத்து வருவதன் அரசியலை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. ஈழத்தில் போர் முடிவுற்றப் பிறகு, சிங்களப் பேரினவாத அரசால் ஈழச்சொந்தங்கள் வன்னியிலுள்ள முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட இழிநிலையே, தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் தொடருமென்றால், இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் அவமானமில்லையா?

ஆகவே, இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, தமிழகத்திலுள்ள வதை முகாம்களை மூடி, ஈழச்சொந்தங்களுக்கான நலவாழ்வையும், கௌரவமான வாழ்க்கைச்சூழலையும் உருவாக்கித் தர வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும். அதனால், தமிழ்நாட்டிலுள்ள ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமை தரப்பட வேண்டுமென ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கும் தமிழ்நாடு அரசு, ஈழச்சொந்தங்களைப் பிணைத்திருக்கும் சிறப்பு முகாம்கள் எனப்படும் வதைக்கூடங்களை உடனடியாக மூட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். 

 

click me!