பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை. சிபாரிசு பேசிய காவல் உயர் அதிகாரிகள். முதல்தகவல் அறிக்கையில் குட்டு அம்பலம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2021, 4:46 PM IST
Highlights

காரில் சென்று கொண்டிருக்கும் போது சாப்பிட சிலவற்றை கொடுத்ததாகவும், காரில் வசதியாக அமர தலைக்கு தலையணை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின் பாட்டு பாடுமாறு கேட்டதாக பெண் எஸ்பி புகாரில் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் பாட்டு பாடியதாகவும், பாடியதற்கு வாழ்த்துவது போல் இரண்டு கைகளை பிடித்து கொண்டதாகவும், பின் 20 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு பாட்டு பாடியதாகவும் தெரிவித்துள்ளார். 

டிஜிபி மீது பெண் எஸ்பி கொடுத்த புகாரில் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையின் மூலம் பல காவல்துறை உயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்த டிஜிபிக்கு ஆதரவாக செயல்பட்டது அம்பலமாகியுள்ளது. 

பெண் எஸ்பி  பாலியல் துன்புறுத்தல் ஆளானதாக  கொடுத்த புகாரில், தமிழக டிஜிபி  ஒருவர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. மேலும் புகார் அளிக்க வந்த பெண் எஸ்பியை தடுத்த  எஸ்பி ஒருவர் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கையில் எடுத்தது. அதில் சிபிசிஐடி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனவும் தெரிவித்திருந்தது. தற்போது விழுப்புரம் சிபிசிஐடி பதிவு செய்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில்  கரூரில் முதலமைச்சர் பரப்புரை பயணத்தின் போது கடந்த 21ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக பெண் எஸ்பி தெரிவித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி பல உயர் அதிகாரிகள் பரப்புரை செய்யும் இடத்தில் இருக்கும் போது, முதல்வர் அடுத்தகட்டமாக பரப்புரை செய்யும் இடத்திற்கு தன்னுடன் வருமாறு அழைத்ததாக பெண் எஸ்.பியிடம் தெரிவித்துள்ளார். அதன்பின் முதல்வரின் அடுத்த கட்ட பிரச்சாரம் நாமக்கலில் நடந்த பிறகு  இரவு 7.40 மணி அளவில் டிஜிபி மற்றும் தானும் அவரது வாகனத்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி கிளம்பியதாக தெரிவித்துள்ளார். காரில் சென்று கொண்டிருக்கும் போது சாப்பிட சிலவற்றை கொடுத்ததாகவும், காரில் வசதியாக அமர தலைக்கு தலையணை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். 

அதன் பின் பாட்டு பாடுமாறு கேட்டதாக பெண் எஸ்பி புகாரில் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் பாட்டு பாடியதாகவும், பாடியதற்கு வாழ்த்துவது போல் இரண்டு கைகளை பிடித்து கொண்டதாகவும், பின் 20 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு பாட்டு பாடியதாகவும் தெரிவித்துள்ளார். பின் தனக்கு பிடித்தமான பாடல்களை கேட்டதால் யூடியூப்பில் பாட்டுக்களை போட்டுள்ளார்.  பின் டிஜிபி தவறாக நடந்து கொள்ள ஆரம்பித்த உடன் கைகளை விடுமாறு வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அதன் பின் தான் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது தன்னை எடுத்த போட்டோக்களை செல்போனில் காண்பித்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து தவறான நோக்கத்தில் தன்னுடன் பேசி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

தன்னை பேச வற்புறுத்திய போது அலுவல் ரீதியாக மட்டுமே பேசியதாக தெரிவித்துள்ளார். உளுந்தூர் பேட்டையை நெருங்கும் போது மீண்டும் கைகளை பிடித்து தவறாக நடக்க முயன்றதாகவும், உளுந்தூர் பேட்டை வந்தவுடன் உயர் அதிகாரிகள் இருந்ததால் தன்னை விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின் தன் காரிலேயே அலுவலகத்துக்கு செல்ல வற்புறுத்தியதாகவும், அதனை மறுத்து வேறு கார் மூலமாக தான் அலுவலகம் வந்து விட்டதாக பெண் எஸ்பி புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மறு நாள் 22 ஆம் தேதி தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரிடம் அந்த டிஜிபி நடந்து கொண்ட விதம் குறித்து  புகார் அளிக்க கிளம்பியதாக கூறியுள்ளார்.  புகார் அளிக்க சென்னை செல்வதாக கூறியதை தனது ஐ ஜி ஜெயராமனிடம் கூறியுள்ளார். தனக்கு ராஜேஷ் தாஸ் தொடர்ந்து போன் செய்ததாகவும், தன்னை தயவு செய்து கால் பண்ணி பேசுமாறு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். 

அதன்பின் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஜீயாஉல்ஹக் மற்றும் திருப்பூர் எஸ் பி திஷா மிட்டல், கடலூர் எஸ் பி அபினவ் ஆகியோரிடம் ,தான் ராஜேஷ் தாஸிடம் சண்டையிட்டு செல்வதாகவும் தன்னை தடுத்து நிறுத்துமாறு அந்த டிஜிபி அழைத்து 3 எஸ்பிக்களிடம் தெரிவித்ததன் அடிப்படையில், 3 எஸ்பிக்களும் மாறி மாறி கால் செய்யும் போது தான் போனை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். தன்னை புகார் அளிக்க சென்னைக்கு செல்லாமல் இருக்க பேச சொன்னதாக 3 எஸ்பிக்களும் அடுத்தடுத்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் செங்கல் பட்டு பரனுர் சுங்கச்சாவடி நெருங்கும் போது மாவட்ட எஸ்பி ஒருவர் மற்றும் ஆய்வாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் 15 காவலர்கள் வழி மறித்து  சென்னை செல்ல வேண்டிய தன்னை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்துள்ளார். 

தனது பாதுகாவலரையும் டிரைவரையும் மிரட்டி இறங்க சொன்னதாகவும் பின், தன் கார் சாவியை ஆய்வாளர் வாகனத்தில் இருந்து எடுத்து கொண்டதாக தெரிவித்துள்ளார். தனது காருக்கு முன்னதாக அவர்களது காரை நிறுத்தி தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த டிஜிபி  செல்போன் அழைப்பில் இருப்பதாகவும் அவரிடம் கட்டாயம் பேச வேண்டும் என அந்த எஸ்பி  வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். முதலில் செல்போனை வாங்க மறுத்த பின்னும் தொடர்ந்து வற்புறுத்தியதால் பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி  செல்போனில் பேசியதாகவும் அப்போது காலில் விழுந்து தான் செய்த காரியத்திற்கு மன்னிப்பு கேட்பதாக. கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு வழி விடுமாறு தான் எந்த விஷயமானாலும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி இடம் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து தான் உனது நண்பன் என அந்த டிஜிபி தெரிவித்ததாகவும், அதற்கு நாம் நண்பர்கள் இல்லை, நான்  எஸ்பி மற்றும் நீங்கள் ஒரு சிறப்பு டிஜிபி என்று பதில் அளித்ததாக கூறியுள்ளார். தான் இருக்கும் இடத்திற்கு அந்த டிஜிபி வந்து கொண்டிருப்பதாகவும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்ததாகவும், ஆனால்  தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியிடமே பெண் எஸ்.பி சந்திக்க விரும்புவ்தாகவும் பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபியிடம்  பேச விருப்பமில்லை என தெரிவித்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் சில எஸ்பிக்களிடம் பேச வற்புறுத்தியதாகவும், திருப்பூர் எஸ் பி திஷா மிட்டலிடம் பேசுவதாக ஒப்புக்கொண்டதை யடுத்து, வழிமறித்த எஸ்பி வாகனத்தை செல்ல அனுமதித்ததாக பெண் எஸ்பி புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி யை சந்தித்து புகார் அளித்ததாகவும், அந்த புகாரில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் பெண் எஸ்பி குறிப்பிட்டுள்ளார். புகார் அளித்த பின் மீண்டும் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது தனது கணவர் அழைத்து பேசியதாக தெரிவித்த அவர் , குறிப்பிட்ட எண்ணிலிருந்து தனது கணவரின் தந்தைக்கு அழைப்பு வந்ததாகவும், டிஜிபி தன்னிடம் நடந்து கொண்ட விவகாரம் குறித்து மர்ம நபர் ஒருவர் பேசியதாகவும் ,அதற்கு டிஜிபி மன்னிப்பு கேட்பது பற்றி பேசியதாகவும், இது பற்றி அறியாத பாதிக்கப்பட்ட பெண் எஸ் பியின் மாமனார் செல்போன் அழைப்பை துண்டித்து விட்டது தொடர்பாகவும்   முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனது உயர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக நடந்து கொண்டதாகவும், மேலும்  புகார் அளிக்கும்போது 
எஸ்பியை கொண்டு தடுத்து நிறுத்தியது, இந்த விவகாரத்திற்காக பல மாவட்ட எஸ்பிகளை வைத்து பேசியது என அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக டிஜிபி மீது பெண் எஸ்பி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது உறவினர்கள் மூலம் கொடுத்த புகாரை திரும்பப் பெற அழுத்தம் கொடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார். டிஜிபி உயரதிகாரி என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த வழக்கில் ஆதாரங்களை மாற்றவும் மற்றும் ஆவணங்களை பெற முடியும் என்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பெண் எஸ்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தினால் தான் மனதளவிலும் குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிஜிபி மீதும் அதை தடுக்க உதவிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பெண் எஸ்பி தான் பாதிக்கப்பட்ட விதம் குறித்து புகாரில் தெரிவித்ததை முதல் தகவல் அறிக்கையில் முழுவதுமாக சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த முதல் தகவல் அறிக்கை வெளியானதன் மூலம் டிஜிபி மற்றும்  மாவட்ட எஸ்பி ஆகியோர் மட்டுமல்லாது, மேலும் 3 எஸ்பிகளும் ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 15 காவலர்கள் என புகார் அளிக்க வந்த பெண் எஸ் பியை தடுக்க முயன்றது அம்பலமாகியுள்ளது. சிபிசிஐடி யின் அடுத்த கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலியல் தொந்தரவு செய்த சிறப்பு டிஜிபி  கட்டாய காத்திருப்புக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புகார் அளிக்க வந்த பெண் எஸ்பியை தடுத்த மாவட்ட எஸ்பி சம்பந்தப்பட்ட மற்ற காவல்துறை அதிகாரிகளும் துறை ரீதியான நடவடிக்கையை சந்திக்க உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

click me!