பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முறிகிறதா?... இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 2, 2021, 4:45 PM IST
Highlights

ஒருவேளை அவ்வாறு ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று அக்கட்சியினர் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். 

புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து அதிமுக, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு சில காலமே இருப்பதால் ஆட்சி அமைப்பது மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை சரிக்கும் என்பதால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க உரிமைகோரவில்லை. 

ஒருவேளை அவ்வாறு ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று அக்கட்சியினர் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் யாரும் ஆட்சி அமைக்க உரிமைகோராததால் புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதனிடையே சமீபத்தில் காரைக்கால் பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் இன்று ரங்கசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அந்த பேச்சுவார்த்தையில் என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து வெளியாகத நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ரங்கசாமி இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். பாஜக கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!