அடுத்த ரெய்டில் சிக்கப்போவது இவர் தான்.. சூசகமாக சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

By vinoth kumarFirst Published Oct 19, 2021, 10:20 AM IST
Highlights

திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு உயரம் குறைந்த கட்டிடங்கள் கட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

திமுக ஆட்சியில் நெருங்க முடியாத இடம் எதுவுமில்லை. குயின்ஸ் லேண்ட் நிலத்தை 2 நாட்களில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி கோவில் மேம்பாடு குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு;- திருச்செந்தூர் கோவிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு உயரம் குறைந்த கட்டிடங்கள் கட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அன்னதானக்கூடம் கீழ்தளம், முதல்தளம் என 1000 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவிற்கு திட்டங்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில், டி.வி., கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். 

மேலும், குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது. இன்னும் 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசுக்கு நெருங்க முடியாத இடமென்று எதுவுமில்லை. தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போலவே, தற்போது முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தவறு செய்திருந்தால், நிச்சயம் அவரும் விசாரணை செய்யப்படுவார் என்று சேகர்பாபு கூறினார்.

click me!