2026 ம் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி. பொதுக்குழுவில் ராமதாஸ் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2021, 5:49 PM IST
Highlights

 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைக்கப்படும். பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இருக்கும்,  நகர்புற பேரூராட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பா.ம.க போட்டியிடும் என தெரிவித்தார். 

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் பாமக கூட்டணி தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கட்சி தொடங்கி 32 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் பாமகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என ஒவ்வொரு மேடையிலும் தனது அதிருப்தியை ராமதாஸ் வெளிப்படுத்தி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வன்னிய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலம் சமூக நீதி அரசியல் தலைவராக அறியப்பட்டவர் ராமதாஸ். அதன்மூலம் 1989 ஆம் ஆண்டு பாமக என்ற கட்சியை நிறுவி தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் அவர்.  வடமாவட்டங்களில் வன்னியர்கள் பரவலாக வசிக்கும்  பகுதிகளில் தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கி வைத்துள்ளது அவர் நிறுவிய பாமக. இதன் மூலம் கடந்த காலங்களில் அதிமுக- திமுக என இரண்டு  கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்து தனது அரசியல் ஆளுமையை தக்க வைத்து வந்துள்ளது பாமக. அதே நேரத்தில் சொந்த சாதியை வைத்து அரசியல் செய்யும் ராமதாஸ் அரசியல் கட்சி தொடங்கி தனது குடும்பத்தை வளம் மிக்கதாக மாற்றிக் கொண்டாரே தவிர  தான் சார்ந்த சமுதாயத்திற்கும், தன் சமுதாய மக்களுக்கும் எந்த நன்மையும் அவர் செய்யவில்லை என்ற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர்களே பாமகவை புறக்கணித்து வரும் நிலையும் இருந்து வருகிறது.

கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணியிலிருந்த பாமக திடீரென கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பாமகவுக்கு சொல்வாக்கு மிகுந்த பகுதிகளில் தேர்தல் நடந்ததால் பாமக இந்த முடிவு எடுத்தது. தனித்து களமிறங்கியது பாமகவால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. வன்னிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளிலேயே தங்கள் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பது அக்காட்சியை தலைமைக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. அப்படி என்றால் வன்னியர் மக்களே பாமகவை முழுவதுமாக இன்னும் அங்கிகரிக்க வில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் பாமகவை விமர்சித்துவருகின்றன.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வன்னிய மக்களும் பாமகவுக்கு வாக்களித்திருந்தால் அக்காட்சி அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் எதிர்வரும் நகராட்சி மன்ற தேர்தலிலாவது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். அதேபோல கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 24 இடங்களை பெற்றாலும், அதில் போதிய அளவிற்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. எனவே ராமதாஸ் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதற்கான அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கூட்டணியில் இருந்த அதிமுக பாமகவுக்கு துரோகம் செய்ததுவிட்டது, பாமகவின் வாக்கு வங்கியை அதிமுக அறுவடையை செய்ததே தவிர, அதிமுக வாக்கு பாமகவுக்கு விழவில்லை என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.

இது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேநேரத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியில் பாமக ஈடுபட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாக பாமகவின் கட்சி கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் பாமக நிறுவனர் ராமதாஸ்,  மாற்றுக் கட்சிகளுக்கு விலை போகிற கட்சி நிர்வாகிகள் தயவுசெய்து பொறுப்பில் இருந்து விலகிவிடுங்கள் கட்சி தொடங்கப்பட்டு 32 ஆண்டுகளாகியும் பாமகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது யாருடைய தவறு? நம்முடைய தவறா? மக்களுடைய தவறா? அன்புமணி ராமதாசைப்போல திறமையானவர் ஒருவரும் இல்லை. ஆனால் அவரையே ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் மறுத்து வருகின்றனர்.

ஆனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் அன்புமணியை முதல்வர் ஆக்கியே தீரவேண்டும். அடுத்த முறை பாமக ஆட்சி செய்ய வேண்டும், அப்போதுதான் வன்னிய மக்களின் வாழ்வு வளம் பெறும், நீங்கள் தலைநிமிர முடியும், வன்னிய சமுதாயம் ஒரு காலத்தில் ஆண்ட சமுதாயம், ஆனால் இப்போது அடிமைப்பட்டு கிடக்கிறது என்று அவர் வன்னிய இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அவரின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதேபோல எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 60 இடங்களில் கைப்பற்றியே ஆகவேண்டும் என்றும், அதற்காக ஒவ்வொரு பாமக தொண்டரும் வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் என்றும், தனது மூச்சு இருப்பதற்குள் அன்புமணியை முதல்வராக்கியே தீரவேண்டும் எனவும் அவர் தனது கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புத்தாண்டு தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. 2021க்கு விடை கொடுப்போம் 2022ஐ வரவேற்போம் என்பதை மையமாகக் கொண்டு இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே மணி, மாநில பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே மூர்த்தி,வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி மற்ற தமிழகம் , புதுச்சேரியை  சேர்ந்த ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கலந்துகொண்டனர். பொதுக்குழுவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைக்கப்படும். பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இருக்கும்,  நகர்புற பேரூராட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பா.ம.க போட்டியிடும் என தெரிவித்தார். 
 

click me!