
வீடு இழந்தவர்களுக்கு திருவொற்றியூர் பகுதியிலேயே குடியிருப்புகள் அமைத்துத் தரவேண்டும் என தமிழக முதல்வருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது தங்குவதற்கு இடமில்லாமல் தவிப்பதால் உடனடியாக வாடகை வீடுகளில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜயகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், "சென்னை திருவொற்றியூர் அருகே உள்ள அரிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த திங்கள்கிழமை இடிந்து விழுந்து தரைமட்டடமானது. வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதால் நிர்க்கதியாக நிற்கும் மக்கள், தற்போது அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மாற்றுவீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
இருப்பினும் வீடுகளை இழந்த மக்கள் அனைவரும், கூலித்தொழிலாளர்கள் என்பதால் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே திருவொற்றியூர் பகுதியிலேயே அவர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கித்தர தமிழக அரசு முன்வரவேண்டும். அதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசு வாடகைக்கு வீடுகளை எடுத்து அவர்களை குடியமர்த்த வேண்டும்.
தற்போது தங்குவதற்கு இடமில்லாமல் தவிப்பதால் உடனடியாக வாடகை வீடுகளில் அவர்களை தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேமுதிக சார்பில் களத்தில் ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் உண்மைநிலை பற்றி கேட்டறிந்தோம். எனவே, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திருவொற்றியூர் கிராமத் தெருவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 300-க்கும்மேற்பட்ட வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள 28 வீடுகள் கொண்ட குடியிருப்பு, நேற்று முன்தினம் இடிந்துதரைமட்டமானது. வீடுகள் இடிந்தகுடியிருப்பின் அருகில் வசிப்பவர்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு வெளியேறினர். 72-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள திருமண மண்டபங்களுக்கும், தங்கள் உறவினர், நண்பர்களுடைய வீடுகளுக்கும் சென்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகள் இடிந்த பகுதியையும், அருகில் உள்ள இதர குடியிருப்புகளையும் அண்ணா பல்கலைக்கழக சிவில் இன்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயா தலைமையிலான நிபுணர் குழு மண் பரிசோதனை உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.