வன்னியர்கள் தனி இடஒதுக்கீடு..! சட்டப்பிரச்சனை..! தமிழக அரசை வழிக்கு கொண்டு வந்த ராமதாஸ்..! நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Jul 27, 2021, 12:29 PM IST
Highlights

வன்னியர்கள் உள்ளிட்ட 108 ஜாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இது தங்களை வஞ்சிக்கும் செயல் என்றும் வன்னியர்களுக்கு மட்டும் தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்றும் ராமதாஸ் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி உறுதி மொழி எடுத்து பதவி ஏற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பது தான் சரியானது என பாமக நிறுவனர் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை வன்னியர்களுக்கான 10.50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

வன்னியர்கள் உள்ளிட்ட 108 ஜாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இது தங்களை வஞ்சிக்கும் செயல் என்றும் வன்னியர்களுக்கு மட்டும் தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்றும் ராமதாஸ் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தார். கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி ராமதாஸ் போராட்டங்களை முன்னெடுத்தார். முதல் நாள் போராட்டத்திலேயே தலைநகர் சென்னை தவித்துப்போனது. ஆங்காங்கே வன்முறைகளும் வெடித்தன. இதனை அடுத்து அன்புமணியை அழைத்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் வர இருந்த நிலையில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என்பதை தெள்ளத் தெளிவாக ராமதாஸ் எடப்பாடியிடம் கூறியிருந்தார். இதனை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேறியதோடு, ஆளுநர் ஒப்புதலும் அளித்தார். மேலும் அப்போதே அந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டப்பல்கலைகழகத்தில் முனைவர் படிப்பிற்பான சேர்க்கையில் வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டது.

ஆனால் திடீரென நேற்று வெளியான பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இந்த அரசாணை பின்பற்றப்படவில்லை. அதாவது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு முறை இல்லாமல் அதற்கு முந்தைய முறையிலேயே மாணவர் சேர்க்கைக்கான செயல்முறை தொடங்கியது. இதனால் அதிர்ச்சியான பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார், அந்த அறிக்கையில், கடந்த பிப்ரவரி மாதமே வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு அரசாணை செயல்பாட்டிற்கு வந்து, கல்வித்துறையில் அது செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை பின்பற்றாதது வன்னியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறியிருந்தார்.

மேலும், அரசியல் அமைப்பு படி பதவி ஏற்றுக் கொண்டுள்ள முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் சட்டங்களை செயல்படுத்த வேண்டும். அது தான் இந்திய அரசியல் அமைப்பு. மாறாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை நிறைவேற்ற மறுப்பது அந்த சட்டத்தை மட்டும் அல்லாது இந்திய அரசியல் அமைப்பையே அவமதிப்பது போன்றது என்றும் அந்த அறிக்கையில் ராமதாஸ் காட்டமாக கூறியிருந்தார். இதற்கிடையே வன்னியர்களுக்க தனி இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அவர்கள் ராமதாஸின் அந்த  அறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழக அரசை கேள்விகேட்க ஆரம்பித்தனர்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், கூட வன்னியர்கள் தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என்று கூறினார். இந்த நிலையில் தமிழக அரசு திடீரென நேற்று மாலை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. கடந்த எடப்பாடி பழனிசாமி அரசு நிறைவேற்றிய சட்டத்தை பின்பற்றி பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் வன்னியர் தனி இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவிடப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையாகவும் வெளியிட்டார். இதற்கு மருத்துவர் ராமதாஸ் உடனடியாக நன்றி தெரிவித்ததோடு, தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்.

வன்னியர்கள் இடஒதுக்கீடு விவகாரத்தை அரசியலாக கருதாமல் அதில் உள்ள சட்ட பிரச்சனையை சுட்டிக்காட்டி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை தான் தமிழக அரசை யோசிக்க வைத்ததாகவும், ஒரு வேளை இந்த சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்றால் பாமக நிச்சயம் நீதிமன்றம் செல்லும் தேவையில்லாத சர்ச்சைகள் எழும் என்று கருதியே எடப்பாடி அரசு நிறைவேற்றியதாகவே இருந்தாலும், அதனை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!