தமிழ்நாட்டுக்கு தனி கொடி.. தொல்.திருமா பெருமுழக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 27, 2021, 3:09 PM IST
Highlights

தமிழ்நாடு கூட அந்த நாளில்தான் மொழிவழி அடிப்படையில் மாநிலமாக பிரிந்தது, எனவே தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் அந்த நாளை கொண்டாட வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்து தனிக் கொடியை வெளியிட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனிக்கொடி அறிவித்து மாநில பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், தமிழக அரசும்  தனிக் கொடி அறிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் டெல்லி புறப்படும் முன் செய்தவர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் .திருமாவளவன் கூறியதாவது, 

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர்1 ஆம் தேதியை, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில பிறந்தநாள் என கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல்  கர்நாடகா தங்களது மாநிலத்திற்கு தனிக் கொடியை அறிவித்து நீண்டகாலமாக கொடி ஏற்றி கொண்டாடி வருகிறது, மெட்ராஸ் பிரசிடென்சி, அதாவது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து  பிரிந்ததை தான் அவர்கள் அப்படி கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு கூட அந்த நாளில்தான் மொழிவழி அடிப்படையில் மாநிலமாக பிரிந்தது, எனவே தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் அந்த நாளை கொண்டாட வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். அதற்கேற்ப விடுதலை சிறுத்தைகளின் கட்சி சார்பிலும் மாநில அடையாளத்திற்காக இறையாண்மை  மாநாடு நடத்தி தமிழருக்கு என்று கொடியை அறிமுகப்படுத்தினோம்.

அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு வருகிறோம், வரும் நவம்பர் 1 ஆம் தேதியை,  தமிழ்நாடு பிறந்த நாளை விடுதலை சிறுத்தைகள் இறையான்மை நாளாக கொண்டாட உள்ளது. எனவே இந்த நாளை தமிழக அரசும் தமிழ்நாட்டின் பிறந்த நாளாக அறிவித்து தமிழக மக்கள் அனைவரும் இதைக் கொண்டாட அறிவிப்பு வெளியிட வேண்டும். அதேபோல தமிழ் நாட்டுக்கு எனத் தனிக் கொடியையும் அறிவிக்கவேண்டும், அந்த ஒரு நாளில் சாதிய அடையாளங்களைக் கடந்து அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் ஒருங்கிணைய வேண்டும். அந்த வாய்ப்பை உருவாக்கித் தருகின்ற நாளாக நவம்பர் 1 ஆம் தேதி அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

click me!