
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைவர் ஆறுமுக தொண்டமான் மறைவுக்குப் பின்னர் அக்கட்சியின் தலைவராக செந்தில் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையில் செயல்பட்டு வரும் முக்கிய அரசியல் கட்சியாகும். இது துவக்கத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் என அழைக்கப்பட்டு வந்தது. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் அதில் பெயர் மாற்றம் ஏற்பட்டது, இக்காட்சி பொதுவாக இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சியாக உள்ளது. இக்காட்சியின் ஆரம்ப காலத் தலைவராக இருந்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான். அவரைத் தொடர்ந்து ஆறுமுக தொண்டைமான் நீண்டகாலம் இலங்கை காங்கிரசின் தலைவராக இருந்து வந்தார். இவர் இலங்கை அரசின் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார்.
அதுமுதல் அக்கட்சிக்கு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில்தான் இரண்டாண்டுகள் கழித்து பழமையும் பாரம்பரியமும் மிக்க இலங்கை காங்கிரஸ் கட்சிக்கு இன்று செந்தில் தொண்டமான் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆறுமுகம் தொண்டமானின் மருமகனான செந்தில் தொண்டைமான் இலங்கையில் ஊவா மாகாணத்தில் துணை முதல்வராகவும் மூன்று மாதங்கள் பொறுப்பும் முதல்வராகவும் இருந்தவர் ஆவார். மாகாண அரசியலில் மட்டுமே பங்காற்றி வந்த செந்தில் தொண்டமான் ஆறுமுக தொண்டமானால் கடந்த முறை முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் களத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
அதன்படி ஊவா மாகாணத்தில் உள்ள பதுலா மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் செந்தில் தொண்டைமானும் போட்டியிட்டார். அப்போதிலிருந்து இலங்கை தமிழர் காங்கிரஸின் அடுத்த தலைவர் செந்தில் தொண்டமான்தான் என்ற பேச்சுக்களும் விவாதங்களும் எழத் தொடங்கியது. இந்நிலையில்தான் அவர் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசியலில் அனுபவமும் மூப்பும் கொண்ட செந்தில் தொண்டைமான் இலங்கை காங்கிரசின் புதிய தலைவராகி உள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது தலைவர் பதவிக்கு மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் போட்டியிட்டனர். புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் பிரதி தலைவராக கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளராக ஏ.பி சக்திவேலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.