2011 - 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரிடம் இருந்த எம்.எல்.ஏ பதவியும் எடப்பாடி பழனிச்சாமியால் பிடுங்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அரசை விமர்சனம் செய்து வருகிறார். இதனிடையே இவர் அமைச்சராக இருந்தபோது, 16 பேரிடம் தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 95 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடிசெய்துள்ளதாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றார். இதையடுத்து, இதேபோன்றதொரு புகாரை அருள்மொழி என்பவர் செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர்மீது தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த மோசடி வழக்கு குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜிக்கு கடந்த பிப்.5 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பிப்.8 ஆம் தேதி ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். ஆனால் அன்றைய தேதியில் செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. இதையடுத்து இன்று ஆஜராகுமாறு கால அவகாசத்தை நீட்டித்தது. ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக இன்னும் இரண்டு வார காலம் அவகாசம் கெட்டு செந்தில்பாலாஜி வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.