பழைய கடனை வட்டியோட கேட்கும் செந்தில் பாலாஜி! விழிபிதுங்கி பதுங்கி நிற்கும் தம்பிதுரை...

By sathish kFirst Published Oct 6, 2018, 2:55 PM IST
Highlights

பழைய கடனை வட்டியோட எண்ணி கீழ வைக்க சொல்லுங்க: தம்பிதுரையை தலையிலடிக்க வெச்ச மாஜி அமைச்சர். 

அ.தி.மு.க.வில் அசைக்கமுடியாத ஆளுமை இவர். ஜெயலலிதா ஆண்ட காலத்தில் பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியம் படைத்த நபர்களில் மிக மிக முக்கியமானவர் இவர். அக்கட்சியில் காலங்காலமாக கோலோச்சிக் கொண்டிருந்த சீனியர் மோஸ்ட் நபர்களை ஜஸ்ட் லைக் தட் ஆக ஓவர் டேக் செய்துவிட்டு அவர்  கொடி நாட்டியதெல்லாம் அசாதாரணமான அரசியல் விளையாட்டு. 

அத்தனை சீனியர்களும் பொறாமை கொள்ளும் வண்ணம் போயஸ் கார்டனிலும், கோட்டையிலும் மிகப்பெரிய செல்வாக்கு நிலைக்கு வந்த செ.பா.வுக்கு அந்த திடீர் செல்வாக்கே சரிவுக்கும் வழி வகுத்தது. பரமசிவன் கழுத்துக்கு ஏறிய பாம்பை பார்த்து பயப்படுபவர்களும் பலர் இருந்தால், அந்த பாம்பை குறிவைத்து அம்பு விடுபவர்களும் பலர் இருப்பார்கள்தானே. அப்படித்தான் ஒரு ரகசிய அம்பில் சரிந்தார் பாலாஜி. 

ஆனாலும் மீண்டும் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர், இன்று தினகரனின் தெறி தளபதிகளில் ஒருவராக நின்று எடப்பாடியார் - பன்னீர்செல்வம் இருவருக்கும் சவால் விட்டு சதுராடிக் கொண்டிருக்கிறார். 

இப்பேர்ப்பட்ட செந்தில் பாலாஜியின் சமீப கால டார்கெட் தம்பிதுரைதான். இருவரும் கரூர் மாவட்டத்து அ.தி.மு.க.வினர். ஒருவரின் வளர்ச்சி மற்றவரை பாதிக்குமென்பதால் இருவரும் ஒருவரையொருவர் கவிழ்த்து தான் மேலேறும் அரசியலை செய்து கொண்டிருந்தனர். ஜெ., உயிரோடு இருந்த காலத்தில் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட சறுக்கலை மிக தெளிவாக பயன்படுத்தி கொண்டு பல படிகள் முன்னேறினார் தம்பிதுரை. 

ஆனால் இப்போது ஜெ., மரணித்துவிட, ஆளுங்கட்சி மீதிருக்கும் மக்களின் அதிருப்தியை மிக தெளிவாக பயன்படுத்திக்க் கொண்டு, கரூர் மாவட்ட மக்களை மட்டுமல்லாமல் கரூர் நாடாளுமன்ற தொகுதியையே தம்பிதுரைக்கு எதிராக மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறார் செந்தில். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நிற்கும் தைரியம் தம்பிதுரைக்கு வரக்கூடாது, அப்படியே வந்தாலும் பிரச்சாரத்தின் ஒவ்வொரு நாளிலும் தன்னை (செந்தில் பாலாஜியை) எண்ணி நடுங்கணும், இறுதியில் அவர் தோற்கணும்! இதுதான் செந்தில் பாலாஜியின் த்ரீ லைன்ஸ் அஜெண்டாவாகி இருக்கிறது. 

தம்பிதுரை மீது செந்தில் செம்ம காண்டில் இருக்க பல காரணங்கள். ஜெ., முன்னிலையில் தனக்கு ஏற்பட்ட சறுக்கலை பூதாகரமாக்கினார் என்பது மட்டுமில்லை, கடந்த சட்டமன்ற தேர்தலில் செந்திலுக்கு எம்.எல்.ஏ. சீட்டே கிடைக்க கூடாது! என்று தம்பி ரொம்பவே துடித்தாராம். மீறி கிடைத்தாலும் கரூர் தொகுதி கிடைக்க கூடாது என்று போராடி அரவக்குறிச்சிக்கு அவரை தள்ளியதிலும் தம்பிதுரையின் பங்கு இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, செந்தில்பாலாஜிக்கு ஆகாத விஜயபாஸ்கரை கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக்கி, அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வாங்கிக் கொடுத்ததும் தம்பிதுரையின் கரங்கள் என்பதே செந்திலின் கடும் கோபம். 

இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து செக் வைத்தே தீருவேன்! என்று கங்கணம் கட்டிக் கொண்டு காத்துக் கிடந்த செந்திலுக்கு இதோ லட்டு போல் வந்திருக்கிறது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் தருணம். அதனால்தான் சமீபத்தில் பரமத்தியில் நடந்த உண்ணாவிரதத்தில் பேசுகையில் “நான் அமைச்சராவதை தடுக்க பல நூறு புகார்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியவர் தம்பிதுரைதான். என்னை அமைச்சர் பதவியிலிருந்து அம்மா நீக்குவதற்கும் இவர்தான் காரணம். 

இரண்டு முறை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் எம்.பி.யாக இருந்துவிட்ட தம்பிதுரை இந்த முறை டெபாசீட் இழக்கப்போவது நிச்சயம்.” என்று பொளந்து கட்டிவிட்டார் செந்தில் பாலாஜி. 

ஏற்கனவே கரூர் நா.ம. தொகுதி மக்கள் தன் மீது ஆதங்கத்தில் இருப்பதாக மீடியாக்கள் பேசி வரும் நிலையில் செந்தில்பாலாஜியும் இப்படி சீனப்பெருஞ்சுவராக தனக்கு எதிராக எழுந்து நிற்பது தம்பிதுரையை பெரிதாய் கலவரப்படுத்தியுள்ளது. இதை தனது ஆதரவாளர்களிடம் சொல்லிப் புலம்பியேவிட்டாராம். 

அவர்கள் ஆதங்கப்பட்டு, செந்தில்பாலாஜியிடம் நேரில் இதுபற்றி கேட்டபோது “என்னை அரசியல்ல இருந்தே ஒழிச்சுக்கட்டணும்னு நினைச்சாருல்ல. இப்போ என்னோட நேரம், நான் வைக்கிறதுதான் வரிசை. அவரு  தோற்கணும், அது விதி.” என்றாராம். அந்த அ.தி.மு.க. சீனியர்களோ ‘சரி விடுங்க தம்பி. பெரியவர்தானே உங்களை விட, மன்னிச்சிடுங்களேன்!’ என்றார்களாம். 

அதற்கு நக்கலாய் சிரித்த செந்தில்பாலாஜி “போன நாடாளுமன்ற தேர்தல் நேரத்துல அம்மாவோட உத்தரவுப்படி தம்பிதுரைக்காக விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்தேன், தண்ணியா பணத்தை செலவும் செஞ்சேன். ஆனா வெற்றி பெற்ற பிறகு ஒரு சிரிப்பு கூட சிரிக்கலை என்னை பார்த்து. இந்த நொடி வரைக்கும் என்னை அழிக்க நினைக்கிறார். தில்லு இருந்தா என்னை முடக்க சொல்லுங்க பார்ப்போம். 

அட அது கூட வேணாமுங்க, போன தேர்தல்ல நான் அவருக்கு பண்ணுன செலவுப்பணத்தை வட்டியோட எண்ணி கீழ வைக்க சொல்லுங்க. நான் அவரு வழியில நிற்கமாட்டேன். முடிஞ்சா ஜெயிச்சுட்டு போவட்டும்.” என்றாராம். 

இந்த பதில் அப்படியே தம்பிதுரைக்கு பார்சல் செய்யப்பட, மனிதர் கொதித்துவிட்டாராம்.

click me!