செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம்... ஸ்டாலின் முடிவால் பதற்றத்தில் திமுக நிர்வாகிகள்!

By vinoth kumarFirst Published Dec 14, 2018, 1:57 PM IST
Highlights

கடந்த ஒரு வாரகாலமாகவே தமிழகத்தை அதிர்ச்சி மோடில் வைத்திருந்த செந்தில் பாலாஜி அதிரடி சரவெடிகள் முழங்க திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்து விட்டார்.

கடந்த ஒரு வாரகாலமாகவே தமிழகத்தை அதிர்ச்சி மோடில் வைத்திருந்த செந்தில் பாலாஜி அதிரடி சரவெடிகள் முழங்க திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்து விட்டார். இதுவரை எதிர் முகாமில் இருந்து பணியாற்றி வந்த செந்தில் பாலாஜியை லோக்கல் திமுக நிர்வாகிகள் அரவணைத்து செல்வார்களா? இல்லை உடனிருந்து கவிழ்த்துவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.   

இதுகுறித்து கரூர் மாவட்ட தி.மு.க புள்ளிகள் சிலரோ, ``எம்.ஜி.ஆர் காலம் தொட்டே, ஜெயலலிதா காலத்திலும் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்து கரூர் மாவட்டத்தில் தனிச்செல்வாக்கோடு இருந்தவர் கரூர் சின்னசாமி. 1996-ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்த செந்தில் பாலாஜியின் அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல்தான் இரண்டே ஆண்டுகளில் அப்போதைய தி.மு.க மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் தலைமையில் தி.மு.க-வில் இணைந்தார். 

பத்தாயிரம் ஆதரவாளர்களோடு 60 லட்சம் ரூபாய் செலவு செய்து பல வாகனங்களில் போய் சென்னையில் இணைந்தார். ஆனால், அவரால் பதினைந்து ஆண்டுகளில் தி.மு.க-வில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. மாவட்டச் செயலாளராக தலையால் தண்ணீர் குடித்துப் பார்த்தார். முடியவில்லை. இப்போது, தான் கட்சி மாற காரணமான அதே செந்தில் பாலாஜியை தி.மு.க-வுக்கு இழுக்கும் சக்தியாக மாறி இருக்கிறார். உண்மையில் சின்னசாமி தன்னை கவிழ்த்த செந்தில் பாலாஜியை திணறடிக்க இப்படி தி.மு.கவுக்கு கொண்டு வர முயற்சி செய்தாரா? இல்லை உண்மையில் செந்தில் பாலாஜியை அரசியலில் காப்பாற்ற உதவுகிறாரா என்பதும் தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரிடம் அரசியல் கற்ற சின்னசாமியையே கட்சி மாற விட்டு கதற விட்ட செந்தில்பாலாஜி, தி.மு.க-வில் தனி ராஜ்ஜியம் நடத்துவார்" என்கிறார்கள். 

கொங்கு மண்டலத்தில் கட்சிப் பணி செய்வதற்கு ஆள் இல்லை. அதை ஈடுகட்டுவதற்குச் செந்தில் பாலாஜி சரியான தேர்வாக இருப்பார்' என நம்புகிறார் ஸ்டாலின். அரவக்குறிச்சி தொகுதிக்கு அவர்தான் வேட்பாளராக்கப்படுவார் என்பதால் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுவிலும் உயர்மட்டக் குழுவிலும் உறுப்பினராக இருக்கும் கரூர் கே.சி.பழனிசாமியும், மாவட்டச் செயலாளரான நன்னியூர் ராஜேந்திரனும் படு அப்செட்டில் இருக்கிறார்கள். இத்தனை நாள்களாக இவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜியை எதிர்த்து அரசியல் செய்து வந்தார்கள். 

இனிக் கட்சிக்குள் அவருடைய ஆதிக்கம் அதிகமாகிவிடும் என பயப்படுகிறார்கள். நமக்கு இனி வேலை இருக்காது என நினைக்கின்றனர். ஈரோடு முத்துச்சாமியை விடவும் வேளாளர் சமூகத்தில் செந்தில் பாலாஜிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகத் தலைமை நம்புகிறது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.கவின் கொங்கு கேபினட்டுக்கு வலுவான எதிரியாகவும் அவர் இருப்பார் எனவும் பேசத் தொடங்கியுள்ளனர். 

கட்சியின் தீர்மானக் குழுவிலோ அல்லது தேர்தல் பணிக்குழுவிலோ செந்தில் பாலாஜிக்குப் பொறுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தி.மு.கவில் இருக்கும் கொங்கு நிர்வாகிகள் இதனை மைனஸாக இதைப் பார்க்கின்றனர். தலைமை நடத்தும் அரசியலைப் புரிந்து கொள்ள முடியாமலும் தவிக்கிறார்கள். இனி கொங்கு மண்டலத்தில் அதிகாரபூர்வ பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருப்பார்' எனச் சொல்லாமல் சொல்லிவிட்டது தலைமை. இதன் சாதக, பாதகங்கள் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும்" என்கிறார்கள். 

click me!