அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலுக்கு எதிராக அவரது மனைவி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக இன்று மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை வாதத்திற்கு பிறகு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்பாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த 22ஆம் தேதி நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி மனைவியின் தரப்பில் ஆஜரான என்.ஆர்.இளங்கோ,
undefined
விசாரணைக்கு நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி
அமைச்சரின் கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை என கூறினார். மேலும் நள்ளிரவு 11 மணி வரை செந்தில் பாலாஜியிடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பதற்கான எந்தவொரு விளக்கமும் அமலாக்கத்துறையினர் குறிப்பிடவில்லை என கூறினார். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஐந்து முறை சம்மன் அனுப்பியபோது, செந்தில் பாலாஜி ஒரு முறையும், அவரின் ஆடிட்டர் நான்கு முறையும் ஆஜராகியிருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் கைது செய்ய வேண்டிய காரணம் என்ன என கேள்வி எழுப்பினார். எனவே இந்த விவகாரத்தில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என வாதிட்டார்.
விசாரணை காலமாக கருத கூடாது
இதனையடுத்து அமலாக்கத்துறை சார்பாக காணொலி காட்சி மூலம் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய பின்பு கைது தொடர்பான ஆவணங்களை வழங்கியபோது செந்தில் பாலாஜி அவற்றைப் பெற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்வதாக அவரின் மனைவிக்கும், சகோதரருக்கும் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்தபோது, அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என கூறியவர், சட்டப்படிதான் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டதாக கூறினார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலாகக் கருதக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து பதில் வாதத்துக்காக விசாரணையை தள்ளிவைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும்
இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஐகோர்ட்டில் கூடுதல் மனு நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட என் கணவரை, நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு முறையாக பரிசீலிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள்து. . மாறாக அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை சட்ட விரோதமானது என அறிவித்து எனது கணவரை விடுவிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை சார்பாகவும் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால் இதுவரை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை
இதனையடுத்து இன்று வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து தொடர் சிகிச்சையில் இருப்பது தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அமலாக்கத்துறையின் விசாரணை காலத்தை நீட்டிப்பதா? அல்லது தற்சமயத்திற்கு தள்ளிவைப்பதா என்பது குறித்து இன்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.