அவர் தயவின்றி அணுவும் அசையாது..! அப்செட்டில் சீனியர் அமைச்சர்கள்..! குஷியில் அதிகாரிகள்..!

By Selva KathirFirst Published Aug 5, 2021, 11:37 AM IST
Highlights

கலைஞர் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் அனைவரும் குறுநில மன்னர்கள் போல செயல்படுவதாக ஒரு புகார் உண்டு. ஜெயலலிதா அரசுக்கும் கலைஞர் அரசுக்கும் இது தான் வித்தியாசம் என்று கூட பேச்சுகள் எழுவதுண்டு.

ஜெயலலிதா இருந்த போது எப்படி அரசு இயங்கியதோ அதே பாணியில் தற்போது அரசு இயங்கிக் கொண்டிருப்பதாக பொறுமிக் கொண்டிருக்கின்றனர் சீனியர் அமைச்சர்கள்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போதெல்லாம் துறைகளுக்கு என்று அமைச்சர்கள் இருந்தாலும் அவர்களின் செயலாளர்கள் மூலமாகத்தான் அந்த துறை இயங்கும். டெண்டர், டிரான்ஸ்பர், புதிய திட்டம் என எதுவாக இருந்தாலும் துறைகளுக்கான செயலாளர்கள் மூலமாக பைல்கள் நேரடியாக போயஸ் கார்டன் சென்றுவிடும். அங்கு அப்போது அதிகாரத்தில் இருந்த சின்னம்மா சொல்லும் அறிவுறுத்தலின் படியே டெண்டர்கள் முடிக்கப்படும், டிரான்ஸ்பர்கள் நடைபெறும்.

ஆனால் கலைஞர் அரசில் சீனியர் அமைச்சர்கள் வைப்பது தான் சட்டம். டிரான்ஸ்பர் மட்டும் அல்ல டெண்டர்களையும் அமைச்சர்களே இறுதி செய்து முதலமைச்சர்அலுவலகத்திற்கு தகவல் மட்டும் தெரிவித்துவிடுவார்கள். இதனால் கலைஞர் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் அனைவரும் குறுநில மன்னர்கள் போல செயல்படுவதாக ஒரு புகார் உண்டு. ஜெயலலிதா அரசுக்கும் கலைஞர் அரசுக்கும் இது தான் வித்தியாசம் என்று கூட பேச்சுகள் எழுவதுண்டு.

இந்த நிலையில் புதிதாக அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் சீனியர் அமைச்சர்களாக இருந்தாலும் கூட துறை சார்ந்த முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது என்கிறார்கள். டிரான்ஸ்பர், டெண்டர், புதிய திட்டம் என எதுவாக இருந்தாலும் அதற்கு முதலமைச்சர் அலுவலகத்தின் ஒப்புதல் மிக முக்கியம் என்கிறார்கள். அதாவது துறை சார்ந்த செயலாளர்கள் இந்த கோப்புகளை முதலில் அதிகாரம் பொருந்திய அந்த நபருக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்கிறார்கள். அதிகாரம் பொருந்திய அந்த நபர் ஓகே சொன்னால் மட்டுமே பைல் முதலமைச்சர் அலுவலகம் செல்வதாக கூறுகிறார்கள்.

இதே போல் முதலமைச்சர் அலுவலகத்தின் முக்கிய பைல்கள் கூட மிக முக்கிய அதிகாரி மூலமாக அதிகாரம் பொருந்திய நபரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சொல்கிறார்கள். அதில் ஏதேனும் நெருடல் இருந்தால் முக்கியமான அதிகாரம் பொருந்திய அந்த நபர் திருத்தம் செய்து அனுப்புவதாகவும் சொல்கிறார்கள். அதாவது அந்த மிக முக்கியமான நபர் தற்போது கட்சி விவகாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி விவகாரங்களில் முழுக்கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள்.

அதன்படி சீனியர் அமைச்சர்களாக இருக்க கூடியவர்களின் துறை சார்ந்த பல்வேறு பைல்கள் கூட அடுத்தகட்டத்திற்கு செல்லாம் நோட் போட்டு வைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதிகாரிகள் பைல் தொடர்பான பின்புலத்தை ஆராய்ந்து அதிகாரம் பொருந்திய நபருக்கு சில டிப்ஸ்களை வழங்குகின்றனர். அதன் அடிப்படையில் தான் அந்த டெண்டர், டிரான்ஸ்பர் என எல்லாமே நடைபெறுவதாக கூறுகிறார்கள். எல்லாமே அவர் செயல் என்றால் பிறகு அமைச்சர்களாக நாங்கள் எதற்கு என்று சீனியர் அமைச்சர்கள் புலம்ப, அதிகாரிகள் தெம்பாக கோட்டையை ரவுண்ட் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் வட மாவட்டத்தை சேர்ந்த ஒரே ஒரு அமைச்சருக்கு மட்டும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் அலுவலகத்தில் மட்டும் பைல்கள் உடனுக்குடன் க்ளீயர் ஆகிறதாம்.

click me!