
அமைச்சர் செங்கோட்டையனை டிஜிபி ராதாகிருஷ்ணன் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தன்னை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஐபிஎஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
தமிழக காவல்துறையில் பல மாற்றங்கள் டிச.5 க்கு பிறகு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உளவுத்துறை ஐஜி மட்டுமே மூன்று முறை மாற்றப்பட்டுள்ளார். டிஜிபி , கமிஷனர் , சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி என பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்சியே ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் போது மாற்றம் எங்கே செய்வது என்று ஆட்சியாளர்களும், நிலையில்லாத அரசில் நாம் ஏன் போய் சிக்கி கொள்ளவேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகளும் நினைப்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎஸ் மாற்றங்கள் தள்ளிப்போனது.
ஆனால் தனது நீண்ட நாள் கனவான சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்காக பெரிதும் முயற்சி எடுத்து வருகிறார் சீனியர் ஐபிஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணன். ஏற்கனவே திமுக ஆட்சியில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தாக்குதல் விவகாரத்தில் மாற்றப்பட்டார். திமுக முத்திரை குத்தப்பட்ட இவர் கடந்த 2016 தேர்தலின் போது திமுக தலைவர் கருணாநிதியை சென்று சந்தித்த ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவர்.
அடுத்து திமுக ஆட்சித்தான் வரும் என்று நம்பி சென்று ஏமாந்த அதிகாரிகளில் இவரும் ஒருவர் , அதனால் திமுக சார்பு அதிகாரி என்ற முத்திரை மேலும் அழுத்தமாக விழ பேனலில் இருந்த சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி இவருக்கு ஜூனியரான டி.கே.ராஜேந்திரன் வசம் போனது.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருக்கும் ராதா கிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார் , இவரைவிட சீனியர் அர்ச்சனா ராமசுந்தரம் 1980 ஆம் பேட்ச் அதிகாரி ஆவார், ஆனால் மகேந்திரன் , ஜார்ஜ் , டிகேஆர் மூவரும் 84 பேட்ச் அதிகாரிகள் ஆவர், இதில் 80 ஆண்டே பணியில் சேர்ந்தாலும் வயதில் இளையவர் என்பதால் அர்ச்சனா இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வு பெறுகிறார். ஆனால் இவர் டெல்லி பணிக்கு சென்றுவிட்டார்.
அடுத்த சீனிரான ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு ஓய்வு பெருகிறார். அடுத்து தான் 84 ஆம் ஆண்டு அதிகாரிகளாக மகேந்திரன் , ஜார்ஜ் , டிகேஆர் என வருகின்றனர். இதில் டிகேஆர் ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார்.
தற்போது டிகேஆர் முதலமைச்சர் எடப்பாடியுடன் நெருக்கமாக இருக்கிறார். ஆனால் எடப்பாடிக்கும் ,கட்சி மேலிடத்துக்கும் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. ஆகவே தங்களுக்கு ஆதரவான அதிகாரியை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கொண்டு வர கட்சி மேலிடம் நினைக்கிறது.
அதை பயன்படுத்தி எடப்பாடிக்கு எதிரணியான செங்கோட்டையன் மூலம் தனக்கு பதவி வாங்கிவிடலாம் என ராதாகிருஷ்ணன் நினைத்து செங்கோட்டையனை சந்தித்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கு தகுதி தற்போது ராதாகிருஷ்ணனுக்கு உள்ளதால் அவரை நியமிக்க எந்த தடையும் இருக்காது. ஆகவே அவர் தனக்கான இடத்தை தக்க வைத்துகொள்ள செங்கோட்டையன் மூலம் காய் நகர்த்த இந்த சந்திப்பை பயன்படுத்தியுள்ளார் என்று ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் இப்போது ஹைடாக் ஓடுகிறது.