
சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சசிகலா தரப்புக்கு ஆதரவு அளித்த கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ சண்முகத்தை கட்சித் தொண்டர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதால் ஆவேசமடைந்து இனிமேல் இந்த ஊருக்குள் வரமாட்டேன் என சபதம் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலாவுக்கு கட்சியின் அமைச்சர்கள், நிர்வாகிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் சசிகலாவை எதிர்ப்பதோடு, கட்சியில் போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ்ஐ ஆதரித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் சட்டப் போரவியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமியை ஆதரித்த எம்எல்ஏக்களுக்கு பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் சொந்த தொகுதிக்குள் செல்ல முடியாமல் சென்னையிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கிணத்துக்கடவு தொகுதி எம்எல்ஏ சண்முகம், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் உதவியாளர் ஒருவருடன் கலந்து கொள்ளச் சென்றார்.
அவரை அடையாளம் கண்டுகொண்ட சிலர் சண்முகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் அம்மாவுக்காத்தான் உங்களுக்கு ஓட்டுப் போட்டோம்..நீங்கள் எப்படி எங்களைக் கேட்காமல் சசிகலாவுக்கு ஆதரவு தந்தீர்கள்..கிணத்துக்கடவு தொகுதியை அடகு வைத்துவிட்டீர்களே என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு சண்முகம் நீங்கள் யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லையே என தெரிவித்தார். அதற்கு கட்சியினர் நீங்கள் எங்கே போனை எடுத்தீர்கள்? கூவத்தூரில் கும்மாளம் அடித்தீர்களே என கடுமையாக பேசினர்.
இதனால் ஆவேசமடைந்த எம்எல்ஏ இனிமேல் இந்த ஊருக்குள் நான் வரமாட்டேன் என கூறியபடி அங்கிருந்து தப்பி ஓடினார்.