
குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது…இப்படி யார் சொன்னது?
குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்குவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்று பிரதமர் நரேந்திரை மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில் 6 மற்றும் 7 ஆவது கட்ட தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.
அனல் பறக்கும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி,அகிலேஷ் யாதவ், மாயாவதி உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
பூர்வாஞ்சல் பகுதிக்குட்பட்ட மாவ் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது மாபியா கும்பல் தலைவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவ் தொகுதியில் போட்டியிடுகிறார். இது போன்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.
குண்டர்கள் சிறைக்கு செல்லும் போது ஏன் சிரித்துக்கொண்டே செல்கின்றனர்? ஏனென்றால் சிறைக்குள் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. ஆனால் உத்தரபிரதேசத்தில் பா.ஜ,க, அரசு அமைந்தபிறகு சிறைகள், சிறையாகவே இருக்கும். குற்றவாளிகளுக்கான வசதி மையங்களாக இருக்காது என மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
மாநிலத்தில் இதுவரை நடந்த வாக்குப்பதிவில் வாக்காளர்கள் பா.ஜ,க.வையே ஆதரித்துள்ளனர். இதனால் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணியும், பகுஜன் சமாஜ் கட்சியும் வெற்றிபெற சாத்தியமே இல்லை என தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தின் தற்போதைய அவலநிலைக்கு சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சிகளுமே காரணம் என்றும் சிறந்த நிலவளம், போதுமான தண்ணீர் வசதி, உழைக்க உறுதிவாய்ந்த இளைஞர் சக்தி போன்றவை இருந்தும் மாநிலம் முன்னேற்றம் காணவில்லை என்றார்.
உத்தரபிரதேசத்தை பின்தங்கிய நிலையில் வைத்திருந்ததற்காக இந்த இரு கட்சிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மோடி கூறினார்.