“தனியார் பள்ளிகளை மிஞ்ச ப்ளான் ரெடி..." செம்மயா செக் வைத்த செங்கோட்டையன்!

First Published Jul 10, 2018, 5:42 PM IST
Highlights
Sengottaiyan target private school


தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத் திட்டங்களை இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தனியார் பள்ளிகளை விஞ்சும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் +2 புதிய பாட மாற்றம் ஒரு வரலாற்றைப் படைக்கும் பாட மாற்றமாக அமையும். இந்தியாவில் 80 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தின் இந்த எண்ணிக்கை 1.60 லட்சமாக உள்ளது.

இதை மாற்றும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத்திட்டத்தை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 பாடத் திட்டங்கள் இணைக்கப்படும். இதனால், படித்து முடித்தவுடனேயே அந்தந்த பகுதிகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வியாக அது மாற்றப்படும்.

மாணவர்களுக்கு 500 இடங்களில் சிஏ பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அந்தவகையில், தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழும்.

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே நேரத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக 412 நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் இருந்து பயிற்சிகள் தொடங்கும். சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 80 லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

click me!