
திமுக தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான கலைஞர் கருணாநிதி தன்னுடைய 94வது வயதில், உடல் நலக்குறைவால் இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். எண்ணிலடங்கா தமிழர்கள் கலைஞரின் இந்த பிரிவால் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
அண்ணாவின் அன்புத்தம்பியான கலைஞருக்கு மரணத்தின் பிறகும் கூட, அண்ணாவின் அருகில் தான் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்நிலையில் அவரது மரணத்தை அடுத்து அவரை நல்லடக்கம் செய்ய, அண்ணா சமாதியின் அருகே மெரினாவில் இடம் வேண்டும். என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுக அரசியல் தலைவர்கள், மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் ஆகியோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதற்கு சட்ட ரீதியாக தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் எனக்கூறி, அங்கு இடம் ஒதுக்க முடியாது என மறுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை தொடர்ந்து சில அதிமுக அமைச்சர்களே கருணாநிதிக்காக பழனிச்சாமியிடம் பேசி இருக்கின்றனர். அதற்கு அம்மா இருந்திருந்தால் இதை தான் செய்திருப்பார் . அம்மா இருந்திருந்தால் நீங்கள் இப்படி கேட்டிருப்பீர்களா? என்று வேறு பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார் முதல்வர்.
அதிமுகவில் வெகு காலமாக மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன். பழனிச்சாமி முதல்வராக ஆன பிறகு எந்த ஒரு காரியத்திற்காகவும் அவரது வீட்டு வாசல் படியை மிதித்தது கிடையாது.ஆனால் கலைஞருக்காக அவர் நேற்று அங்கு சென்றிருக்கிறார்.
இதுவரை எடப்பாடியிடம் எதுவும் கேட்காத செங்கோட்டையன் கேட்டும், எடப்பாடி பிடிவாதமாக மறுத்துவிட்டாராம். தற்போது கிண்டியில் காமராஜர் நினைவிடம் அருகே கலைஞருக்காக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கலைஞரை அண்ணாவின் அருகே சேர்த்துவிட திமுகவினர் கடுமையாக போராடி வருகின்றனர்.