பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்.. அதிமுகவை துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி.. செல்லூர் ராஜூ

By vinoth kumarFirst Published Jun 4, 2022, 1:30 PM IST
Highlights

 அதிமுகதான் தற்போது எதிர்க்கட்சி. ஆயிரம் கிளைகளைக் கொண்டு செயல்படும் கட்சி அதிமுக. 10 ஆயிரம் பேரை திரட்டிவிட்டார்கள் என்பதை வைத்து எதிர்க்கட்சி என கூற முடியாது. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம். 

அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜக தனது கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், அதன் வளர்ச்சி அதிமுகவுக்கு நல்லதல்ல. திராவிட கொள்கைகள் மற்றும்  தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக பாஜக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதனையடுத்து, பொன்னையனுக்கு வி.பி.துரைசாமி பதிலடி கொடுத்திருந்தார். ராஜ்யசபா சீட் கிடைக்காத விரக்தியில் பொன்னையன் பாஜகவை குற்றம் சாட்டுவது கண்டிக்கத்தக்கது. 

தமிழகத்தில் அதிமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என தெரிவித்தவர். அதிமுக 67 சட்டமன்ற உறுப்பினர் வைத்து கொண்டு எதிர்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஆனால் 4 சட்டமன்ற உறுப்பினர் வைத்து கொண்டு பாஜக எதிர்கட்சியாக அனைத்து கேள்விகளையும் முன் வைக்கிறது  என கூறினார். ஆளுங்கட்சியின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் அதிமுக தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறினார். 

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுகதான் தற்போது எதிர்க்கட்சி. ஆயிரம் கிளைகளைக் கொண்டு செயல்படும் கட்சி அதிமுக. 10 ஆயிரம் பேரை திரட்டிவிட்டார்கள் என்பதை வைத்து எதிர்க்கட்சி என கூற முடியாது. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். அதிமுகவுக்கு கூடுவது கொள்கை கூட்டம். இரை போட்டால் கூட்டம் வரும். தீர்ந்தால் பறந்துவிடும்.  வி.பி.துரைசாமி எங்களை விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம். திமுகவில் இருந்து பாஜகவிற்கு அவர் எதற்கு சென்றார் தெரியாதா என கேள்வி எழுப்பினார். அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம்.

யாருடனும் கூட்டணி இல்லை, தனித்தே போட்டி என சொல்ல அதிமுக தயார்? மற்ற கட்சியினர் தயாரா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசிடம் பதவி பெறுவதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்வதாக விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் அரசு பதவி பெற்றதை சுட்டிக்காட்டி பேசினார்.

click me!