
மதுரைக்குப் போய் விட்டாலே, மு.க. அழகிரி அரசியல் தொற்றிக் கொண்டுவிடும் பலருக்கும். இந்த ஜுரத்துக்கு செல்லூர் ராஜுவும் ஆளாகியுள்ளார்.
மதுரையில் அம்மா எலிசபெத் ஜெயசீலி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தான், அவருக்கு திடீரென்று மு.க. அழகிரியின் நினைவு வந்துள்ளது.
செல்லூர் ராஜூவுடன், முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது அவர், எத்தனையோ பேரை வாழ வைத்தவர் மு.க.அழகிரி என்று கூறினார்.
இப்படி திமுக.,வைச் சேர்ந்த மு.க.அழகிரியை திடீரென பல பேர் முன்னிலையில், அதிமுக.,வைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் புகழ்ந்து பேசியது பலருக்கும் வியப்பைத் தந்தது. என்ன ஆச்சு நம்ம அண்ணனுக்கு? அண்ணன் அழகிரியைப் பத்தி இங்கே புகழ்ந்து தள்ளுறாரு என்று காதைக் கடித்தனர்.