
வடமேற்கு பருவமழைக்கு நடவடிக்கை இல்லை என்று கூறும் நடிகர் கமல் ஹாசன், தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது எங்கே போனார்? என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் அரசுக்கு மத்திய அரசு துணை இருப்பதாகவும், ட்ரம்பே வந்தாலும் அதிமுக அரசை ஒன்றும் செய்ய முடியாது என்றும் எல்லாவற்றையும் மேலே இருக்கிற மோடி பார்த்துக் கொள்வார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் கமல் ஹாசன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியை விமர்சிக்க நடிகர் கமல் ஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கமல் ஹாசன் டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்பவர் என்றும் கூறினார்.
ஜெயலலிதா உயிருடன் இல்லாததால், குறுகிய காலத்தில் அரசியல் தலைவராக கமல் ஹாசன் முயற்சி செய்வதாக கூறினார். பருவமழை பெய்து வரும் நிலையில், மழைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறும் கமல், தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டபோது எங்கே போனார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசை குறை கூறி வருகிறார். இது எதிர்கட்சியின் கடமை; அதை அவர்கள் செய்கிறார்கள் என்றார். மத்திய அரசு எங்கள் பக்கம் இருக்கிறது என்று நான் சொல்லிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய ராஜேந்திர பாலாஜி, மத்திய - மாநில அரசுகள் எப்போதும் நியாயத்தின் பக்கம் உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.