கடந்த 10 ஆண்டுகளாக எப்படி இருந்த தமிழகம் 18 மாதங்களில் இப்படி ஆகிவிட்டதே என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகம் இப்படி ஆகிவிட்டதே
பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை ஜீவா நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே. ராஜு, அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய செல்லூர் ராஜூ கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் எப்படி இருந்தது தற்போது 18 மாதங்களில் இப்போது எப்படி இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தான். ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் ஆர்ப்பாட்டம் போராட்டம் தான் நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாக விமர்சித்தார்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் சிறு குறு தொழில் அதிகம் உள்ளது. ஆனால், அந்த தொழில்களுக்கு மின்கட்டணம் ஷாக் அடிப்பது போல் உள்ளது என்று கூறிய அவர், ஜீவா நகர் பகுதியில் குடிசைத் தொழிலாக அப்பள தொழில் நடைபெற்று வருகிறது. ஆனால் அப்பள தொழிலாளர்களுக்கு எவ்வித உதவிகளும் செய்யவில்லையெனவும் குற்றம்சாட்டினார்.
கடைசி வரை இபிஎஸ்
இதனை தொடர்ந்து பேசிய அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை எடப்பாடி பழனிசாமி தான் என தெரிவித்தார். அதிமுகவின் ரயில் நிற்காது. ஏறுபவர்கள் ஏறலாம் இறங்குபவர்கள் இறங்கலாம். ரயில் சென்றுகொண்டே இருக்கும். யாருக்காகவும் நிற்காது. நாங்கள் ஏன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருகிறோம். அவர் எங்களுக்கு ஒரு கிரவுண்ட் நிலம் தருகிறேன் என்று சொன்னாரா. இல்லை, திமுகவை துணிச்சலோடு எதிர்க்கின்றார். அந்த துணிச்சலோடு இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறார்.
கோடி ரூபாய் செலவு, வானுயர்ந்த பேனர்கள், வைத்து தனது மகனின் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள் தற்போதைய அமைச்சர். இதற்கு வருகை தந்த முதலமைச்சர், அமைச்சர் எளிமையாக இருக்கிறார் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதுதான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியவர், திராவிட மாடல் என்று சொல்கிறீர்கள் திராவிட மாடலுக்கான அர்த்தத்தை சொல்லுங்கள் என வைகை செல்வன் கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ..! அமித்ஷாவிற்கு அவசர கடிதம் எழுதிய அண்ணாமலை