விடாமல் விரட்டிய சேகர்பாபு.. துறைமுகம் திமுகவின் கோட்டை என நிரூபித்தார்.

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 4:29 PM IST
Highlights

அது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துறைமுகம் தொகுதி திமுகவின் கோட்டை என கூறப்பட்டு வந்த நிலையில் சேகர்பாபு அத்தொகுதியில் பின்னடைவை சந்தித்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

திமுகவின் கோட்டை என வர்ணிக்கப்படும் துறைமுகம் சட்டமன்றத்  தொகுதியில் தொடர்ந்து பின்னிலை வகித்து வந்த சேகர்பாபு பிற்பகலுக்கு பின்னர் பாஜக வேட்பாளர் வினோஜ் பி. செல்வத்தை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகிறார். இது திமுக மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதில் காலை முதலே திமுக முன்னிலை வகித்து வருகிறது.  மாலை 4 மணி நிலவரப்படி, திமுக 153 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில், அனைத்திலும் திமுக முன்னிலை பெற்று மீண்டும் சென்னை திமுகவின் கோட்டை என்பதை  நிரூபித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அனைத்திலும்  திமுக முன்னிலை வகிக்கிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஐ.பரந்தாமன், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மயிலாப்பூர் தொகுதியில் தா.வேலூ, அண்ணாநகர் தொகுதியில்  எம்.கே மோகன், பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி சேகர், ராயபுரம் தொகுதியில் ஐட்ரீம் மூர்த்தி, சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், திருவிக நகர் தொகுதியில் தாயகம் கவி, ஆயிரம் விளக்கு தொகுதியில் மருத்துவர் எழிலன் என திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். ஆனால் காலையில் திமுக மற்றும் அதன் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் திமுகவின் முக்கிய வேட்பாளராக கருதப்படும் சேகர்பாபு, பாஜக வேட்பாளர் வினோஜ்.பி செல்வத்தை விட குறைவான வாக்குகள் பெற்று பின்னடைவில் இருந்தார்.

அது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துறைமுகம் தொகுதி திமுகவின் கோட்டை என கூறப்பட்டு வந்த நிலையில் சேகர்பாபு அத்தொகுதியில் பின்னடைவை சந்தித்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுகவின் கோட்டையிலேயே கைவைத்து விட்டோம் என பாஜக தொண்டர்கள் ஆரவாரத்தில் மூழ்கி இருந்தனர். ஆனால் பிற்பகலுக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. சேகர் பாபுக்கு ஆதரவான வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு பெட்டிகளின் எண்ணிக்கை தொடங்கியபோது, அவரது ரிசல்ட்டுகள் ஏறு முகத்தைக் காட்டியது. அதாவது சுமார் 2 ஆயிரம் 3 ஆயிரம் வாக்குகள் என பின்தங்கியிருந்த அவர், வினோஜ் பி. செல்வத்தை ஒரேயடியாக பின்னுக்குத் தள்ளி சுமார் 29 ஆயிரத்து 670 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 86 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதன்மூலம் துறைமுகம் திமுகவின் கோட்டை தான் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.  

 

click me!