
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் இனி செல்லாது எனத் திடீர் அறிவிப்புச் செய்திருக்கும் மோடி அரசின் இந்தச்செயல் பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்..
கறுப்புப்பணத்தை மீட்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேநேரத்தில், மோடி அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப்பணத்தை மீட்க எந்த வகையில் உதவும் என்பதுதான் நமக்குக் கேள்வியாக இருக்கிறது.
உள்நாட்டில் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் 45 விழுக்காடு அபராதம் செலுத்திவிட்டால் வழக்கு, தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் எனக் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு 4 மாதம் காலஅவகாசம் அளித்த மோடி அரசு, அப்பாவிப் பொதுமக்களுக்கு ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெறும் 4மணிநேரத்துக்கு முன்பு சொல்லியிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த அறிவிப்பானது, அந்நியப் பணமாகவும், தங்கமாகவும், நிலமாகவும் தனது கறுப்புப்பணத்தைப் பதுக்கி வைத்துள்ள பணமுதலைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது. பிறகெப்படி கறுப்புப்பணத்தை மொத்தமாக மீட்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவிப்பதற்கு முன் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தி, அடிதட்டு மக்களிடம் சராசரியான புழங்கவிட்டபிறகு,அதனை வங்கிகளிலும், தானியங்கி எந்திரங்களிலும் (ATM) போதுமான அளவு கொண்டு சேர்த்துவிட்ட பிறகே அறிவித்திருக்க வேண்டும்.
மேலும், புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் இரண்டாயிரம் ரூபாய் தாளின் மாதிரியை அதிகாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கி வெளியிடும்முன்பே அதன் படம் இணையதளங்களில் வெளிவந்ததே அது எப்படிச் சாத்தியமாயிற்று? ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவை மத்திய அரசு நேற்று இரவு எடுத்திருக்க வாய்ப்பில்லை.
ரூபாய் தாளின் படமே முன்கூட்டியே வெளியாகிருக்கும்போதும் அந்தத் தகவல் மட்டும் வெளியே கசியாமல் இருந்திருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
பொதுமக்களுக்கு எழும் கேள்விகளும், ஐயப்பாடுகளும் இந்நாட்டின் பிரதமரான மோடி தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காது, மக்கள் படும் அல்லல்கள் குறித்துக் கவலையுறாது மனம்போன போக்கில் முடிவெடுத்திருக்கிறார் என்பதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது.
நாட்டுமக்களின் நலனைக் கருத்தில்கொள்ளாது ஒரு இரவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது இன்னொரு ‘அவசரநிலை பிரகடனமாகவே’ இருக்கிறது.
கறுப்புப்பணத்தை ஒழிக்க வெறுமனே ரூபாய் நோட்டை மாற்றினால் மட்டும் போதாது, நாட்டையே ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். அதற்கான பொருளாதாரக்கொள்கையை உருவாக்க வேண்டும். தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரக் கொள்கையை வைத்துக்கொண்டு, வெறும் நோட்டை மாற்றுவதால் எந்தப் பயனும் விளையாது.
மொத்தத்தில் மோடி அரசின் இந்தச் செயலானது கறுப்புப்பணத்தை மீட்டெடுப்பதற்கான முன்முயற்சியாக இல்லாமல், தனது சரிந்த பிம்பத்தை நிலைநாட்டும், உத்திரப்பிரதேசத் தேர்தலின் அரசியல் வெற்றிக்காகவும் செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.