ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நான் சொன்னது சொன்னதுதான் ! அடம் பிடிக்கும் சீமான் !!

By Selvanayagam PFirst Published Oct 14, 2019, 9:21 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள் தான் என பேசியது தொடர்பான கருத்தை நான் திரும்பப் பெற மாட்டேன் என நாம் தமிழ்ர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய சீமான், ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள்தான்” என்று பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீமானுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகம், தேர்தல் ஆணையம், விழுப்புரம் எஸ்.பி அலுவலகம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்

காங்கிரஸாரின் எதிர்ப்பைத் தொடர்ந்து சென்னையிலுள்ள சீமான் வீடு, அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது இரு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி தொடர்பாக தான் பேசியதை திரும்பப் பெறப்போவதில்லை என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பேசிய சீமான், “நான் பேசியதில் வழக்குப் பதிவு செய்யும் அளவுக்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. 

என் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்கொண்டுதான் வந்திருக்கிறேன். உள்ளே இருக்கும் சிதம்பரத்தை வெளியே கொண்டுவரவும், வெளியே இருக்கும் என்னை சிறைக்கு அனுப்பவும் காங்கிரஸ் கட்சி போராடுகிறது. வேறு எந்த மக்கள் பிரச்சினைக்கு அக்கட்சி போராடியுள்ளது” என்று தெரிவித்தார்.

வழக்கினை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறிய சீமான், “பிரச்சாரத்தில் இவ்வாறுதான் பேச வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விதிமுறை ஏதும் விதிக்கவில்லை. எங்கள் இனத்தின் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்தித்தான் நாங்கள் அரசியல் செய்வோம். என் மீது லட்சக்கணக்கான வழக்குகள் உள்ளன. 25 ஆண்டுகளாக இதைத்தான் பேசிவருகிறேன். ராஜீவ் காந்தி தொடர்பாக நான் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெறமாட்டேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

click me!