
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் முடிந்துவிட்டது. திமுக, அதிமுக, தினகரன், நாம் தமிழர் என ஆர்.கே.நகரில் களம் காணும் கட்சிகளும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.கே.நகரில் வரும் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தை அனைத்து கட்சியினரும் தீவிரமாக மேற்கொண்டனர். திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினும், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர் உதயகுமாரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் சுயேட்சையாக களமிறங்கியுள்ள தினகரனும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
பிரசாரத்தின்போது பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் பல்வேறு கேள்விகளையும் வாக்காளர்களிடம் முன்வைத்தார்.
பிரசாரத்தில் பேசிய சீமான், கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் அனைத்தையும் தனியார்கள் சிறப்பாக வழங்குவார்கள் என கூறி தனியாரிடம் அரசு கொடுக்கிறது. கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை தனியார் சிறப்பாக வழங்குவார்கள் என்றால் அரசு எதற்கு? என கேள்வி எழுப்பினார்.
பணப்பட்டுவாடா தொடர்பாக பேசிய சீமான், மக்களுக்கு பணத்தை வாக்கு கேட்கின்றனர். பணத்தை கொடுத்து வாக்குகளை பெற்று ஜெயித்துவந்து நீங்கள் மக்களுக்கு சேவை செய்யப் போகிறீர்கள்? மக்களுக்கே காசு கொடுத்து எம்.எல்.ஏ ஆகி அவர்களுக்கே நல்லது செய்யும் அளவிற்கு நீங்க நல்லவங்களா? என பணப்பட்டுவாடா செய்தவர்களை விமர்சிக்கும் வகையில் கேள்வி எழுப்பினார்.