20 மாதங்களில் போலீஸ் விசாரணைக்கு சென்ற 20 பேர் பலி..! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு- சீமான் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Dec 11, 2022, 7:50 AM IST
Highlights

காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
 

போலீசாரின் கொடூர தாக்குதல்

போலீசார் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாமி தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி விவசாயி செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் என்பவர் மீது கொடுக்கப்பட்ட சாதாரண புகாரின் பேரில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேல் என்பவர் தலைமையில் 8 காவலர்கள் செம்புலிங்கம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நிலையில், வீட்டில் அருண்குமார் இல்லை என்பதால் ஆத்திரமடைந்து, வீட்டிலிருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா மற்றும் மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் கடுமையாகக் காயமடைந்த மூவரும், அரியலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு விவசாயி செம்புலிங்கம் உயிரிழந்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த முக்கிய பிரமுகர்.. மகிழ்ச்சியில் கமல்ஹாசன்.!

விவசாயி உயிரிழப்பு

காவலர்கள் தாக்கியதில் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள்தான் செம்புலிங்கம் உயிரிழக்க முதன்மை காரணம் என்று அவரது குடும்பத்தினர் அளித்த புகாரினை ஏற்க மறுத்து, காவல்துறை எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த நேரத்தில் விவசாயி செம்புலிங்கம் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் காவலர்கள் தமக்கு இழைத்த கொடுமைகள் குறித்தும், தாக்குதல் குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளார். அதுமட்டுமின்றி அரியலூர் அரசு மருத்துவமனை ஆவணங்களிலும் காவல்துறையினரின் தாக்குதலே செம்புலிங்கம் மீதான உயிர்க்காயங்களுக்கான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் செம்புலிங்கத்தைத் தாக்கிய காவலர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?

தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறை.. போராட்டத்தில் குதித்த பாஜக - அண்ணாமலை அறிவிப்பு !

20 மாதங்களில் 20 பேர் பலி

சாதாரண புகாருக்காக 8 பேர் கொண்ட காவல்படை, வழக்கிற்குத் தொடர்பில்லாத விவசாயி செம்புலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளதும், செம்புலிங்கம் உயிரிழப்பு தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்க மறுப்பதும் காவல்துறையின் மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 20 மாதங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 20க்கும் மேற்பட்டோர் காவல்துறை விசாரணையின்போதே உயிரிழந்துள்ளனர். அடிப்படை மனித உரிமைகளுக்கே எதிரான காவல்துறையின் இத்தகைய அதிகார அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அதிகார வல்லாதிக்க கோரமுகமே தொடர்ச்சியாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு முக்கியக் காரணமாகும்.

நீதி விசாரணை நடத்திடுக

ஆகவே, தமிழ்நாடு அரசு காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, குற்றபுலனாய்வுத்துறையின் கீழ் உரிய நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கத்தின் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை.. கோவையில் திமுக ஒட்டிய பரபரப்பு போஸ்டர் !

click me!