கிருஷ்ணகிரியில் ஜெகன் எனும் இளைஞரை ஆணவப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஆணவப் படுகொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவர்களது எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருச்சியில் குரூப் ஸ்டடிக்காக சென்ற 12ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; தாய், தந்தை கைது
மனிதத்தன்மையே அற்ற கொடுஞ்செயல்
கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் 5 வீட்டாரால் ஜெகன் எனும் இளைஞர் நடுச்சாலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சி தருகிறது. நாகரீகம் பெற்று குடிமைச்சமூகமாக வாழ்ந்து வரும் தற்காலத்திலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பென்ற பெயரில் அரங்கேற்றப்படும் ஆணவப்படுகொலைகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது. ஜெகனும், அவரது இணையரான சரண்யாவும் உறவினர்கள் என்றபோதிலும், காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட இப்பச்சைப்படுகொலையை ஒருநாளும் சகிக்க முடியாது. மனித மனங்கள் ஒன்றுபட்டு, மனமொத்து செய்கிற திருமணத்திற்கு சாதி, மதம், வர்க்கம் என எந்தவொரு காரணியைக் காட்டியும் எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது மனிதத்தன்மையே அற்ற கொடுஞ்செயலாகும்.
தனிச்சட்டம் இயற்றிடுக
அதனை வன்மையாக எதிர்க்கிறேன். ஆகவே, தம்பி ஜெகனைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்து சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்படும் ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்