இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று கூறினால் பொறுத்துக் கொள்ள மாட்டேன்; அவ்வாறு சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன், தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்த மண்ணின், இனத்தின் பெரும்பான்மையினர் என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்த மண்ணை ஆள்வதற்கு ஒருவன் கூடவா இல்லை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பெருமைமிகு வீரத்தின் அடையாளமாக இருக்கும் பாட்டனார் தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று, இத்தனை பெரிய மண்ணில் இந்த மண்ணை ஆள்வதற்கு ஒருவன் கூடவா இல்லை என்று அன்று தீரன் சொன்னான் அதையே தான் இன்று அவரின் பேரன் நானும் சொல்கிறேன் என தெரிவித்தார்.
அரசு விழாவில் இன்பநிதிக்கு என்ன வேலை?
இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர் தொடர்பாக கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த இனத்தை அழித்த காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் அதற்கு துணை போன திமுக போன்ற கட்சிகளுக்கும் இந்த மக்கள் இன்னும் வாய்ப்பளிக்கிறார்கள் என்ற கோபத்தில் இந்த கருத்தை கூறியுள்ளேன். குடும்பம் குடும்பமாக இவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருப்பார்களா அரசு விழாவில் இன்பநிதிக்கு என்ன வேலை இருக்கிறது, ஒரு குடும்பத்திற்கு தமிழ்நாட்டின் அதிகாரம் முழுவதும் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். நான் இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ளேன் என்று கூறியது யார் ? நான் என்றும் ஓட்டுக்காக அரசியல் செய்யவில்லை நாட்டுக்காக தான் அரசியல் செய்கிறேன். பைபிள், குரானில் கூறியுள்ளதைப் போன்று இன்று தேவனின் ஆட்சி முறையா இங்கு நடக்கிறது எல்லாம் சாத்தானின் ஆட்சி முறையாக தான் இருக்கிறது.
இஸ்லாம்,கிறிஸ்தவம் இரண்டுமே அநீதிக்கு எதிராக பிறந்த மதங்கள்
ஊழல் லஞ்சம் இயற்கை வளங்களை சுரண்டுவது என்று சாத்தானின் ஆட்சி நடக்கும் இங்கே அந்த ஆட்சிக்கு துணை போபவர்கள் யார் இதைத்தான் நான் குறிப்பிட்டு பேசினேன்.மாறி மாறி திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக ஆட்சி செய்வதை எப்படி இவர்கள் சகித்துக் கொள்கிறார்கள் . எனக்கு இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுடன் இருக்கும் அன்பின் உறவின் வெளிப்பாடுதான் இது. உங்கள் மீது இருக்கும் பேரன்பின் வெளிப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்றால் நமக்குள் இருக்கும் உறவில் என்ன அர்த்தம் இருக்கிறது. மீண்டும் திமுக,அதிமுக என மாறி மாறி வாக்களிக்கும் தவறை அவர்கள் செய்யக் செய்யக்கூடாது என்பதை சுட்டிக்காட்டவே இந்த கருத்தை கூறியிருந்தேன். இஸ்லாம் கிறிஸ்தவம் இரண்டுமே அநீதிக்கு எதிராக பிறந்த மதங்கள் இங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்காமல் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் யார்?
இளையராஜா பெரும்பான்மை அவர் மகன் சிறுபான்மையினரா?
சிறுபான்மை மக்களை திட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஆவேசமடைந்த சீமான், உலக வரலாற்றில் மதத்தின் அடிப்படையில் பெரும்பான்மை, சிறுபான்மை இனம் அடையாளப்படுத்துவது இல்லை மொழியின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்த மண்ணின் இனத்தின் பெரும்பான்மையினர்.
வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை சிறுபான்மையர் என சொன்னால் செருப்பால் அடிப்பேன் என ஆவேசம் தெரிவித்தார். நேற்று பெரும்பான்மையாக இருந்த இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமானும், யுவன் சங்கர் ராஜாவும் இன்று சிறுபான்மையினரா? ஐயா இளையராஜா பெரும்பான்மை அவர் மகன் சிறுபான்மையினரா? இந்த வாதமே பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என சீமான் தெரிவித்தார்.