இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களும் அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, தமிழ் மண் ஒருபோதும் தலை வணங்காது. தமிழ்நாடு மீண்டும் போர்க்கோலம் பூண்டு இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்க்கும்! தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி திணிப்பு
இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரணி நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் பேரன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகளே! அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழுவின் 11வது அறிக்கையில் இந்தியா முழுக்க இந்தியைத் திணிக்கும் செயல்திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களையும், ஒன்றியப் பிரதேசங்களையும் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, தேசிய இனங்கள் மீது இந்தி மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியை கட்டாயப் பயிற்றுமொழியாக்கவும், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை கட்டாயமாக்கி, தேர்வுகளை இந்தியில் நடத்த முற்படுவதன் மூலம் இந்நாட்டில் வாழும் மற்ற மொழிவழி தேசிய இனங்களின் தாய்மொழியைத் திட்டமிட்டு அழிக்கும் கொடுஞ்செயல் அரங்கேறிவருகிறது.
அமித்ஷாவிற்கு எதிராக களம் இறங்கிய ஸ்டாலின்...! அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சியில் பாஜக
இந்திய நாடா? இந்தியின் நாடா?
400 ஆண்டுகளைக் கூடத் தொடாத இந்தி மொழி, 50000 ஆண்டுகளுக்கு மூத்த எங்கள் உயிருக்கும் மேலான தமிழ்மொழியை அழிப்பதா? இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம் என்றும், உலகின் மூத்த மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை என்றும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் ஒரு பக்கம் கூறிக்கொண்டே, இன்னொரு பக்கம் அத்தகைய பெருமைவாய்ந்த மொழியை சிதைக்கும் வேலையில் இறங்குவதா? இது இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா? என்ற கேள்விக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்வார்களா? ஒரு மொழியைத் திணித்து மற்ற தேசிய இனங்களின் தாய்மொழியைப் புறக்கணிப்பதை எப்படி ஏற்க முடியும்?உலக வரலாற்றில் எங்கும் நடந்திராத அளவுக்கு மொழிக்காக அளப்பரிய தியாகங்களையும், மகத்தான அர்ப்பணிப்புகளையும், உயிர் ஈகங்களையும் செய்த பெரும்பூமி தமிழகமாகும்.
மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்
அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி, உயிரீகம் செய்திட்ட தமிழின முன்னோர்களின் செங்குருதி இந்நிலமெங்கும் சிந்தப்பட்டிருக்கிறது. எங்கள் தாளமுத்து நடராசனும், தாளமுத்துவும், கீழப்பழுவூர் சின்னச்சாமியும், சிவகங்கை இராஜேந்திரனும், கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்கநாதனும் இன்னும் பலரும் போராடி உயிர்நீத்தது, இந்தித் திணிப்பையும், அதன் ஆதிக்கத்தையும் தமிழ்மண்ணில் ஒருபோதும் அனுமதியோம் என்பதே தமிழர்கள் உலகுக்கு உரைத்த பேரறிவிப்பாகும். எனவே, பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால், இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களும் அதனை ஏற்றுக் கொண்டாலும்கூட, தமிழ் மண் ஒருபோதும் தலை வணங்காது. தமிழ்நாடு மீண்டும் போர்க்கோலம் பூண்டு இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்க்கும்! தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்! அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருக்கும்!
நவம்பர் 1 ஆம் தேதி பேரணி
அதற்கான தொடக்கமாக வருகின்ற நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்' அன்று இந்தி திணிப்புக்கு எதிரான மாபெரும் கண்டனப் பேரணியை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவிருக்கிறது.கெடுதல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! தீங்கு நேர்ந்திடில் தமிழர்க்கே - இந்தத் தேகம் இருந்தொரு லாபமுண்டோ? என்ற பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சி மொழிகளுக்கு ஏற்ப, அன்னை தமிழ் காக்க நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் இம்மாபெரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணியை இந்திய ஒன்றிய அரசுக்கு எதிரான முதன்மைப் போர் அணியாக மாற்ற மானத்தமிழ் பிள்ளைகள் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகக் கூடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்