பாஜகவில் யார் தமிழகத்தில் போட்டியிடுகிறார்கள் என தனக்குத் தெரியாது என அண்ணாமலை கூறுகிறார், அவர் கட்சி உரிமையாளர் எங்கிருந்தோ அவருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும், அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு ஒரு மேஸ்திரி மட்டுமே என சீமான் விமர்சித்துள்ளார்.
போராட்டத்தில் தோற்றுவிட்டோம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான சாந்தன் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை அலுவலகத்தில் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமான், சாந்தன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகள் மேல் சிறையில் வாடி விடுதலை அடைந்து உயிரிழந்த சகோதரருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். 28 ஆம் தேதி இரவு இலங்கை அனுப்ப இருந்த நிலையில் காலை உயிரிழந்து எங்கள் போராட்டத்தில் தோற்றுவிட்டோம். திரைப்படங்களில் கூட இப்படி ஒரு உச்ச கட்ட காட்சி வராது என கூறினார்.
நாம் தமிழர்களுக்கு விவசாயி சின்னம்
நாடாளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், விவசாயி என்று பேர் வைத்தது நான் தான், சின்னம் ஒரு வலிமை தான் அதை கொண்டு சேர்த்தது நாங்கள் தான். நாடாளுமன்றத்தில் ஒரு அளவுக்கு வாக்கு பெற்றுள்ள கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உள்ளது.
கட்சி சின்னத்திற்கு ஆறு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று உள்ளது, ஒருவர் சின்னம் கேட்டதும் அவசர அவசரமாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் இந்திய கட்சியாக பதிவு செய்துள்ளார் என்கிறார்கள், பதிவு செய்தால் போதுமா? நான் ஆறு முறை தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். இந்த முறை வாய்ப்பு கொடுத்தால் அங்கீகாரம் பெற்று இருப்போம் என தெரிவித்தார்.
வெள்ள பாதிப்பில் ஈடுபட்டதால் மறந்துவிட்டேன்
சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் நேரத்தில் நான் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டு இருந்ததால் கரும்பு விவசாயி சின்னத்திற்கு விண்ணப்பம் செய்வதை கவனிக்காமல் இருந்து விட்டேன். தேர்தல் தேதியை அறிவிக்கும் முன் சின்னத்தை எதற்கு கொடுக்கணும். என்னை முடக்க நினைக்கின்றனர் என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நான் மயில் சின்னத்தை கேட்டபோது தேசிய பறவை என கொடுக்க மறுத்தனர். ஆனால் தேசிய மலர் தாமரை பாஜகவிற்கு கொடுக்கப்பட்டது ஏன்? முதலில் பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும், தேர்தல் முடிந்த பின் வழக்கு தொடருவேன் என தெரிவித்தார்.
பாஜகவின் தாமரை சின்னத்தை முடக்கனும்
நாட்டின் தேசிய மலரை எப்படி சின்னமாக ஒரு கட்சி தாங்கி உள்ளது ஒன்று தேசிய மலரை மாற்றுங்கள் அல்லது கட்சி சின்னத்தை மாற்றுங்கள். வாக்கு பற்றிய பேச்சில் இதர கட்சிகள் என்கிறார்கள், என் கட்சி பேரை சொல்ல அப்படி என்ன தீண்டாமை. அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது தேமுதிக, அதிமுக போட்டியிட்டது, அடுத்து நான் தான். எனவே நான்தான் தமிழகத்திலேயே பெரிய கட்சி 40 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுகிறேன். 234 சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறேன் மற்றவர்கள் கூட்டணிக்காக அலைமோதுகிறார்கள். நோட்டு பேரம் சீட்டு பேரத்தில் ஈடுபடுகிறார்கள்.
அண்ணாமலை ஒரு மேஸ்திரி தான்
பாஜகவில் யார் இங்கு போட்டி இடுகிறார்கள் என தனக்குத் தெரியாது என கூறுகிறார் அண்ணாமலை, அவர் கட்சி உரிமையாளர் எங்கிருந்தோ அவருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும், அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு ஒரு மேஸ்திரி மட்டுமே ஆனால் இது என்னுடைய கட்சி யார் எங்கு போட்டியிட வேண்டும் என்று நான் முடிவு செய்வேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
நெருங்கும் மக்களவை தேர்தல்.. ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியை தட்டித்தூக்கிய இபிஎஸ்..!