
விவசாய நிலத்தை எல்லாம் ஆக்கிரமித்து விட்டு 11 லட்சம் கோடி ரூபாய் கடனை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையிலான கவர்ச்சியான அறிவிப்புகள் இல்லை. ஆனால், விவசாயம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும், விவசாய கடனாக 11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இலக்கு, ஆபரேஷன் கிரீனுக்காக 500 கோடி ஒதுக்கீடு என விவசாயத்திற்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், கீழ்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த இந்த பட்ஜெட் எந்த வகையிலும் உயர்த்தாது. மேல்தட்டு முதலாளிகளுக்கான பட்ஜெட் தான் இது. விவசாயிகளுக்கு 11 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் முதலாளிகளுக்காக விவசாய நிலத்தை ஆக்கிரமித்து கொடுக்கின்றனர். இப்படி விவசாய நிலத்தை எல்லாம் ஆக்கிரமித்துவிட்டு 11 லட்சம் கோடி ரூபாய் கடனை எந்த வழியில் விவசாயத்திற்கு கொடுப்பார்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.