
தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதாவது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பாராம்பரியமாக நடைபெற்று வரகிறது. தைத் திங்கள் தொடங்கிவிட்டால் தமிழக கிராமங்கள் ஜல்லிக்கட்டால் களைகட்டிவிடும். ஒவ்வொரு கிராம மக்களும் மாடுகளை தன் உடன்பிறந்த சகோதரனாக நினைத்து வளர்த்து வருவார்கள். மேலும் தன் சகோதரனுடன் அன்யோன்யமாக விளையாடும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு மூலம் கிராம மக்கள் மாடுகளுடனான தங்கள் அன்பை அழகாக வெளிப்படுத்துவார்கள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. ஆனால் மதிமுகனே கடந்த ஆண்டு வெகுண்டெழுந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் விதத்தில் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது கடந்த ஆண்டே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியது. இந்த ஆண்டும் எந்த தடையுமின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இந்நிலையில் தமிழக அரசின் இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக பீட்டா அமைப்பின் சார்பில் , உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது பீட்டா அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது..
இதையடுத்து, ஜல்லிக்கட்டு என்பது கலாசார உரிமையா என்பது பற்றி அரசியல் சாசன அமர்வு விசாரித்து முடிவெடுக்கும் வகையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துடன் ஒன்றிணைந்ததா? என்பது குறித்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது. அதாவது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.