தேர்தலில் தென் மாவட்டத்தில் போட்டியிட சீமான் முடிவு... காரைக்குடி தொகுதிக்கு சீமான் குறி..?

By Asianet TamilFirst Published Oct 13, 2020, 9:25 PM IST
Highlights

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் பணியில் மும்மரமாக களத்தில் இறங்க தயாராகிவருகின்றன.  தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்படி தேர்தல் பணிகளையும் அக்கட்சி தொடங்கியுள்ளது. மேலும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதியையும் அக்கட்சி தயார்ப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. 
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சீமான் கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்லில் 12,497 வாக்குகள் பெற்று 5-ம் இடத்தைப் பிடித்தார். கடந்தமுறை வட மாவட்டத்தில் சீமான் போட்டியிட்ட நிலையில், இந்த முறை தென் மாவட்டத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீமானின் சொந்த மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ஆகும். அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடலாமா அல்லது பக்கத்து மாவட்டமான சிவகங்கையில் போட்டியிடலாமா என்று சீமான் ஆலோசனை ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக நாம் தமிழர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!