
மத மாற்ற புகாருக்கு ஆளான அரசு பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கிறிஸ்தவ நிர்வாக பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி ஆசிரியர்கள் மாணவியை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால்தான் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் குற்றம் சாட்டின. பின்னர் காவல் துறை விசாரணையில் அது உண்மையில்லை என தெரிந்தது.
அதனையடுத்து அடுத்து அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. தற்போது நாகர்கோவிலை அடுத்த இரணியல் கண்ணாட்டுவிலையில் உள்ள அரசு பள்ளிகள் தையல் பயிற்சி ஆசிரியர் மாணவிகளை மதமாற்றம் செய்ய முயற்சித்தார் என புகார் எழுந்துள்ளது. தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் கிருத்துவ மதத்தை புகுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டதாகவும், பைபிள் தான் நல்ல நூல் என்றும், இந்துத்துவவாதிகள் சாத்தான்கள் என்று அவர் பேசியதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்ததில் மாணவி ஒருவர் அந்த ஆசிரியர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனை அறிந்த இந்து அமைப்புகள் அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் அங்கு வந்த போலீஸார் இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து குறிப்பிட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் கருத்து தெரிவித்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, கண்ணாட்டுவிலை அரசுப்பள்ளியில் மதமாற்றம் தொடர்பாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் குறிப்பிட்டு ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை அடிப்படையில் அந்த ஆசிரியை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார்.
அதன் அடிப்படையில் முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவை தொடர்ந்து அப்பள்ளியில் இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில்தான் கண்ணாட்டுவிலை அரசுப்பள்ளியில் மதமாற்ற முயற்சிக்கு ஆளான தையல் பயிற்சி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் அதற்கான உத்தரவை முதன்மை மாவட்ட கல்வி நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.