பாஜகவில் உள்ள வாரிசுகளை மோடிக்கு தெரியாதா.? வாரிசுகள் பதவியில் இருந்தால் நீக்குவீர்களா.? திமுக கிடுக்கிப்பிடி!

Published : Apr 13, 2022, 03:35 PM IST
பாஜகவில் உள்ள வாரிசுகளை மோடிக்கு தெரியாதா.? வாரிசுகள் பதவியில் இருந்தால் நீக்குவீர்களா.? திமுக கிடுக்கிப்பிடி!

சுருக்கம்

 “நாட்டின் உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதை அறியவிடாமல் திசை திருப்பும் காரியங்களை கனகச்சிதமாக பா.ஜ.க. பார்த்து வருகிறது. ‘ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரிகள் வாரிசு அரசியல்தான்' என்று பிரதமர் நரேந்திர மோடி புதிதாக, ஏதோ அரிய கண்டுபிடிப்பை நடத்தியதைப் போலப் பேசி இருக்கிறார்."

பா.ஜ.க.வில் இருக்கும் வாரிசுகளைப் பற்றி பிரதமருக்குத் தெரியுமா? அல்லது அவர்களை வாரிசுகளாக நினைக்க மாட்டாரா? அப்படி வாரிசுகளாக பதவிகளில் இருப்பவர்களை நீக்கி விடுவாரா என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ கேள்வி எழுப்பியுள்ளது.

மோடியின் வாரிசு பேச்சு

இதுதொடர்பாக  திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில், “நாட்டின் உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதை அறியவிடாமல் திசை திருப்பும் காரியங்களை கனகச்சிதமாக பா.ஜ.க. பார்த்து வருகிறது. ‘ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரிகள் வாரிசு அரசியல்தான்' என்று பிரதமர் நரேந்திர மோடி புதிதாக, ஏதோ அரிய கண்டுபிடிப்பை நடத்தியதைப் போலப் பேசி இருக்கிறார். பா.ஜ.க. நிறுவியதன் 42ஆவது ஆண்டு விழா கடந்த வாரம் டெல்லியில் நடந்துள்ளது. அதில் பேசிய அவர், 2014 முதல் ஆளும்கட்சியாக அகில இந்திய அளவில் பா.ஜ.க இருப்பதால் அதனுடைய சாதனைகளைப் பற்றி பேசவில்லை. 

அதைத்தான் அவர் பேசி இருக்க வேண்டும். ஏழு ஆண்டுகளாக இந்த தேசத்துக்கும், மக்களுக்கும் எதைச் செய்தோம், இனி எதைச் செய்யப் போகிறோம் என்பது குறித்து அவர் பேசி இருந்தால் பாராட்டலாம். அப்படி எதுவும் இல்லாததால், ராகுல் காந்தியை மனதில் வைத்துக்கொண்டு வாரிசு அரசியல் குறித்து பேசி இருக்கிறார். வாரிசு அரசியல் கட்சிகள், குடும்ப ஆட்சியை நடத்துவதாகவும், இவர்களால் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து என்றும், பேசி இருக்கிறார். இத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ‘வாரிசு அரசியலை பா.ஜ.க. மட்டுமே எதிர்க்கிறது. அதை தேர்தல் பிரச்சினையாகவும் பா.ஜ.க மாற்றி இருக்கிறது' என்று பேசி இருக்கிறார் பிரதமர் மோடி.

இதுதான் வாரிசு அரசியல்

அவருக்கு பா.ஜ.க.வை பற்றியே தெரியவில்லை போலும். பா.ஜ.க.வில் இருக்கும் வாரிசுகளைப் பற்றி பிரதமருக்குத் தெரியுமா? அல்லது அவர்களை வாரிசுகளாக நினைக்க மாட்டாரா? அப்படி வாரிசுகளாக பதவிகளில் இருப்பவர்களை நீக்கி விடுவாரா? சில வாரங்களுக்கு முன்னால் ‘ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழில் ‘பா.ஜ.க.வின் வாரிசு அரசியல்' என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் பா.ஜ.க. தலைவர்களில் யாரது வாரிசுகள் எல்லாம் அரசியலில் கோலோச்சுகிறார்கள் என்று இருக்கிறது.

இதுதான் பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் ஆகும். இவர்களைத்தான் எதிர்க்கிறார்களா? அல்லது இவர்களை விட்டு விட்டு எதிர்க்கிறார்களா? அரசியலில் பேச வேண்டியது எது? இன்றைய பிரச்சினை என்பது வாரிசு அரசியலா? பொருளாதாரத்தை எத்தனையோ மடங்கு உயர்த்துவதாகச் சொன்னார்களே? உயர்த்தினார்களா? வேளாண்மையை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு ஆக்குவோம் என்றார்களே? ஆக்கினார்களா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார்களே? கொடுத்தார்களா? கருப்புப் பணத்தை முழுமையாக மீட்டுக்கொண்டு வருவோம் என்றார்களே? மீட்டுக் கொண்டு வந்தார்களா?

பாஜக ஆட்சியில் நடந்ததா?

கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் பணம் கொடுப்போம் என்றார்களே? கொடுத்தார்களா? பா.ஜ.க. ஆட்சியில் பெட்ரோல் விலை உயரவே உயராது என்றார்களே. அதுதான் இன்றைய நிலைமையா? பலவீனமான பிரதமர் இருப்பதால்தான் சீனா அத்துமீறுகிறது. பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஆக்கிரமிப்பே இருக்காது என்றார்களே? சீனா இந்த ஏழு ஆண்டுகளில் அமைதியாகி விட்டதா? மீனவர்கள் கடத்தப்படவோ, கைது செய்யப்படவோ மாட்டார்கள் என்றார்களே? இப்படித்தான் இருந்ததா? ‘அரசியலமைப்புச் சட்டம் மட்டும்தான் எனக்கு வேதம்' என்றார்களே. அப்படித்தான் நடந்து கொள்கிறார்களா? இத்தகைய கேள்விகளை ஜனநாயக சக்திகள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே பா.ஜ.க.வின் திசை திருப்பும் அரசியல் நடக்கிறது. இது செல்லுபடி ஆகாது. கண்ணுக்கு முன்னால் நடக்கும் துன்ப துயரங்களுக்கு யார் காரணம் என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைச்சரின் இலாகா தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை..! ஊராட்சி செயலாளர் பணியில் மோசடி இல்லை..! அடித்துச் சொல்லும் அதிகாரிகள்..!
தமிழகத்தை பாலைவனமாக்க காங்கிரஸ் டார்கெட்.. லாலி பாடும் திமுக அரசு.. இபிஎஸ் ஆவேசம்!