
கர்நாடக மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கமிஷன் கேட்ட விவகாரத்தில் காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை முதலே காண்டிராக்டர் சந்தோஷ் தற்கொலை விவகாரம் தொடர்பாக கார்நாடக மாநில அரசியிலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அம்மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவிடம், பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு:
கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ். காண்டிராக்டரான இவர் சில மாதங்களுக்கு முன் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அமைச்சர் கே.எஸ்.ஈசுவரப்பா வளர்ச்சி பணிகள் செய்யும் விவகாரத்தில் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்க வலியுறுத்துகிறார் என்று பேட்டி அளித்தார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று காண்டிராக்டர் சந்தோஷ் உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் சந்தோஷ் தான் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில் எனது சாவுக்கு அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தான் முழு காரணம் என எழுதப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. சந்தோஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், காண்டிராக்டர் சந்தோஷ் சகோதரர் பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
போராட்டம்:
தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மற்றும் அவரின் உதவியாளர்கள் பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் பெயர்களும் எப்.ஐ.ஆர்.-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அமைச்சர் மற்றும் உதவியாளர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும், கைது செய்யும் வரை காண்டிராக்டர் சந்தோஷின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என அவரது குடும்பத்தார் கூறி வந்தனர்.
"கே.எஸ். ஈஸ்வரப்பா மற்றும் அவரது உதவியாளர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. உடனடியாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். குறுந்தகவலில் சந்தோஷ் தெளிவாக ஈஸ்வரப்பா தான் தனது உயிரிழப்புக்கு காரணம் என குஓறிப்பிட்டு இருக்கிறார்," என கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து இருக்கிறார். மேலும் அம்மாநில எதிர்கட்சிகள் சார்பில் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் காண்டிராக்டர் சந்தோஷ் உயிரிழப்பு விவகாரத்தில் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும் என பெங்களூரில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
பரபரப்பு கடிதம்:
"ஆர்.டி.பி.ஆர். அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தான் எனது சாவுக்கு மிக முக்கிய காரணம். எனது லட்சியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன். கைகளை கூப்பி எங்களின் பிரதமர், முதலமைச்சர், அன்புக்குரிய லிங்யாத் தலைவர் பி.எஸ்.வை மற்றும் அனைவரிடமும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ் தனது கடிதத்தில் எழுதி இருக்கிறார்.
விசாரணை:
கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காண்டிராக்டர் மறைவுக்கான காரணம் குறித்து விரைவாகவும், வெளிப்படையாகவும் விசாரணை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் "ஈஸ்வரப்பா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து இருக்கிறார். அமைச்சர் சந்தோஷ் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து இருக்கிறார். மேலும் விசாரணையில் முழு உண்மை வெளியே வரும்." என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்து இருந்தார்.