கொரோனாவால் சாகக்கூடாது... பட்டினியால் சாகலாமா..? வசதி படைத்தவன் தரமாட்டான். வயிறு பசித்தவன் விடமாட்டான்..!

By Thiraviaraj RMFirst Published Mar 31, 2020, 1:57 PM IST
Highlights

அம்பானி – 1.25 லட்சம் கோடி. அதானி- 96 ஆயிரம் கோடி. வேதாந்தா – 1.03 லட்சம் கோடி. எஸ்ஸார் குழுமம் – 1.01 லட்சம் கோடி. ஜே.பி.குழுமம் – 76 ஆயிரம் கோடி


மக்களிடம் கொரனா நடவடிக்கைகளுக்கு தாரளமாக பண உதவி தரும்படி பிரதமரும், முதல்வரும் வேண்டுகோள் வைத்தார்கள்! ஆனால்,ஏற்கனவே தொழில்,வேலையின்றி நொந்து போயுள்ள மக்களால் எவ்வளவு தந்துவிட முடியும்? என பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’இதை ஏன் அதிகாரத்தில் இருப்பவர்கள் யோசிக்க மறுக்கிறார்கள்..? அன்றாட தினக்கூலி, வாரக்கூலி, நடைபாதை வியாபாரிகள், குப்பை பொறுக்கி சுயதொழில் செய்வோர், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கோடானுகோடி ஏழைகளின் வயிறு இன்றுபட்டினி நெருப்பில் கனன்று கொண்டுள்ளன. இவர்கள், பட்டினியால் செத்தால் கொடுமையல்லவா..?

கொரனாவால் யாரும் சாகக்கூடாது என்ற அக்கரையில் அரசுகள் எடுத்த அனைத்து நடவடிக்கைக்கும் மக்கள் ஒத்துழைத்தனர்! தினமும் ஓடியாடி கஷ்டப்பட்டால் தான் அன்றைக்கு உணவை சாப்பிடமுடியும் என்ற நிலையில் உள்ள சுமார் 18 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்களை முடக்கிவிட்டீர்கள். இதில் புலம்பெயர்தொழிலாளர்கள் எண்ணிக்கை சரிபாதி! இவர்களில் மிகப் பலருக்கு ரேசன் கார்டு கூட இருக்காதே.. இவர்களின் குடும்பத்தினர் சோற்றுக்கு என்ன செய்வார்கள்..?

போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கான அரிசி, பருப்பு, புளி உள்ளிட்ட மளிகை பொருள்களை வீட்டிற்கே சென்று தராவிட்டால் பட்டினிச்சாவுகள் அரங்கேற வாய்ப்பாகிவிடும். ’’பணத்திற்கு எங்கே போவது? இப்போது தானே ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு அதிரடி உதவித் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்தார்’’ என்பார்கள். ஆனால் உண்மையில் இது, ’யானைப்பசிக்கு சோளப்பொறி’ போன்றதே!

கையில் வெண்ணை இருக்க, ஏன் எங்கெங்கோ நெய்க்கு அலைய வேண்டும்? வங்கிகளில் வாராக்கடன் வைத்து அரசுக்கு தண்ணிக் காட்டிவரும் பகாசுரக் கோடீஸ்வரர்களின் கடன்களுக்காக அவர்களின் சொத்துக்களை உடனடியாக ’டேக் ஓவர்’ செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு இந்த பேரழிவுகால சூழலை சமாளித்தால் என்ன தவறு? இது தான் அதற்கு சரியான தருணம்!

அம்பானி – 1.25 லட்சம் கோடி. அதானி- 96 ஆயிரம் கோடி. வேதாந்தா – 1.03 லட்சம் கோடி. எஸ்ஸார் குழுமம் – 1.01 லட்சம் கோடி. ஜே.பி.குழுமம் – 76 ஆயிரம் கோடி இப்படியாகப் பட்டியலிட்டால் பெரு நிறுவனங்களின் வாராக்கடன்கள் மட்டுமே சுமார் எட்டு லட்சம் கோடிக்கும் அதிகமாகும்!

மக்களிடம் கொரனா நடவடிக்கைகளுக்கு தாரளமாக பண உதவி தரும்படி பிரதமரும்,முதல்வரும் வேண்டுகோள் வைத்தார்கள்! ஆனால்,ஏற்கனவே தொழில்,வேலையின்றி நொந்து போயுள்ள மக்களால் எவ்வளவு தந்துவிட முடியும்? கோடிகளை அபகரித்து தராமல் இழுத்தடிக்கும் இந்த கேடிகளிடம் நமது ஆட்சியாளர்கள் பிச்சை கேட்க வேண்டாம்! தர வேண்டியதை எடுத்துக் கொண்டாலே போதும் இப்போதைய பிரச்சினைக்கு அது பேருதவியாகுமே!

’’சாவித்திரி கண்ணா... உன்னைப் போன்ற எளிய பத்திரிகையாளனின் குரலெல்லாம் அம்பலத்தில் ஏறாது.எதுக்கு வீணாகப் புலம்புகிறாய்’’ என்று சிலர் கேட்கலாம். இது ஒற்றைக்குரலாக ஒலித்தால் தான் அலட்சியத்திற்கு ஆளாகும். இது ஏதோ தனிநபர் குரலாக அல்ல,மக்கள் குரலாக வலுப்பெற வேண்டும். வசதி படைத்தவன் தரமாட்டான். வயிறு பசித்தவன் விடமாட்டான். என்று, நம் பட்டுக்கோட்டையார் பாடிவைத்துச் சென்றதையும் நினைவுபடுத்துகிறேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!