குற்ற உணர்ச்சி இல்லாமல் ஏழைகளிடம் வந்தா கையேந்துவது..? மோடியின் வர்க்கச் சுரண்டலை வகிடெடுக்கும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Mar 31, 2020, 1:05 PM IST
Highlights

அடித்தட்டு மக்களின் உழைப்பையும், இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சி, அவற்றைப் பெருமுதலாளிகளின் நலனுக்காகத் தாரை வார்க்கிற மத்தியில் ஆளும் மோடி அரசு, இப்போதும் உழைக்கும் மக்களையே அண்டி அவர்களிடமே நிதிகேட்பது மிகப்பெரும் வர்க்கச் சுரண்டலாகும். 

21 நாட்கள் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று பிரதமர் அறிவிதத்தைத் தொடர்ந்து,  இந்த உத்தரவு குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், “கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி நாடு முழுமைக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துவிட்டு, அந்நாட்களில் அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவுக்கும், வாழ்வாதாரத்திற்கும் எவ்வித உறுதிப்பாட்டையோ, திட்டத்தையோ அறிவிக்காத பிரதமர் மோடி, தற்போது எவ்விதக் குற்றவுணர்வுமின்றி நாட்டு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது அறத்திற்குப் புறம்பான‌ அநீதிச்செயலாகும். 

ஏற்கனவே தவறானப் பொருளாதார முடிவுகளாலும், பிழையான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியை சந்தித்து விலைவாசி உயர்வும், பணவீக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இத்தோடு, எதிர்காலத்தை கணிக்கவே முடியாத கொரோனா எனும் நோய்த்தொற்று பரவலிலிருக்கும் தற்காலத்தில் மத்திய அரசு மக்களிடம் நிதிகேட்டு நிற்பது மாபெரும் பாதகச்செயலாகும். ஏற்கனவே, மக்களிடமிருந்து அபரிமிதமான வரியைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குரிய அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றித்தராது அதனைத் தனியார்மயமாக்கிய ஆளும் வர்க்கம் தற்போது மேலும் அவர்களை சுரண்ட எண்ணுவது மிகப்பெரும் முறைகேடாகும்.

அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நகர்த்த முடியும் எனும் விளிம்பு நிலை பொருளாதாரச் சூழலில் இருக்கிற 45 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களை கொண்டிருக்கிற இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தும்போது கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ, முன்னறிவிப்புகள் குறித்தோ, அடித்தட்டு உழைக்கும் மக்களின் உணவு, வாழ்விட உறுதிப்பாடுகள் குறித்தோ எவ்வித முன்னேற்பாட்டையும் செய்யாது, அவர்களுக்கான பேரிடர் கால நிதியுதவிகள் குறித்து ஏதும் அறிவித்திடாது வெறுமனே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ள பிரதமர் மோடி, தற்போது நாட்டு மக்களிடம் நிதிகேட்டு பொறுப்பை அவர்கள் தலை மீது மொத்தமாய் சுமத்த முயல்வது மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.

இப்பேரிடர் காலத்தையொட்டி, 80 கோடி மக்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றை தருவதாக வாக்குறுதி அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதனை செயல்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காது அறிவித்ததோடு தனது கடமை முடிந்து விட்டதெனக் கடந்துவிட்டார். இவ்வாறு 80 கோடி மக்களே அரசிடம் உதவியை எதிர்பார்த்து நிற்கையில் அவர்களிடமே போய் நிதிகேட்டு நிற்பது என்ன மாதிரியான நிர்வாகச் செயல்பாடு? என்பது புரியவில்லை. 

தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான மக்களை வீதியில் நடக்க வைத்ததோடு மட்டுமல்லாது சமூக விலகலையும் முறித்த மத்திய அரசு, வெறுமனே வெற்று அறிவிப்புகள் மூலமாகவே மக்களின் பசியைப் போக்கி அவர்களது துயரத்தைத் துடைத்துவிட முடியும் என நம்புவது வேடிக்கையாக உள்ளது.

உலக நாடுகளில் அதிகபட்சமாக 60 விழுக்காட்டுக்கும் மேலாக மறைமுக வரி விதித்து அடித்தட்டு மக்களின் உழைப்பையும், இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சி, அவற்றைப் பெருமுதலாளிகளின் நலனுக்காகத் தாரை வார்க்கிற மத்தியில் ஆளும் மோடி அரசு, இப்போதும் உழைக்கும் மக்களையே அண்டி அவர்களிடமே நிதிகேட்பது மிகப்பெரும் வர்க்கச் சுரண்டலாகும். 60 விழுக்காடு இந்திய நாட்டின் வளங்கள் ஒரு விழுக்காடு தனிப்பெரு முதலாளிகளின் வசமிருக்க அதனை மீட்டு, சரிவிகிதத்தில் பகிர்வுசெய்து பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த எவ்வித முன்முயற்சியையும் எடுக்காத மத்திய அரசு தற்போது மக்களின் மீது மீண்டும் பாரத்தை ஏற்றுவது மிகப்பெரும் அடக்குமுறையாகும்.

மேலும், மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து தன்னுரிமையைப் பறித்து தன்னாட்சியை முற்றிலுமாகக் குலைத்து அதிகாரக்குவிப்பில் ஈடுபட்டு எதேச்சதிகாரப்போக்கோடு செயல்பட்டு வரும் மத்திய அரசு, கொரோனோ நோய்த்தொற்றை தடுக்கும் விவகாரத்தில் மாநிலங்களின் கைகளில் பொறுப்பைத் தள்ளிவிட்டு தனது கடமையை கைகழுவி வருவதும், மாநிலங்களுக்குரிய நிதியினைத் தர மறுப்பதும், தொடக்கம் முதலே மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. 

ஆகவே, தனிப்பெரும் முதலாளிகளின் வாராக்கடன்களை வசூலித்தும், அவர்களுக்குரிய வரி உள்ளிட்ட அத்தனை சலுகைகளையும் பறித்தும் வருவாயை உருவாக்கி இப்பேரிடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.  
 

click me!