சாத்தான்குளம்... அத்தை கனிமொழிக்கும் மருமகன் உதயநிதிக்கும் அரசியல் போட்டி.. சீமான் விளாசல்..!

By Selva KathirFirst Published Jul 1, 2020, 10:06 AM IST
Highlights

சாத்தான்குளம் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் விவகாரத்தில் அத்தை கனிமொழியுடன் ஏற்பட்ட உட்கட்சி அரசியல் போட்டியின் காரணமாகவே உதயநிதி அங்கு சென்று வந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசியுள்ளார்.

சாத்தான்குளம் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லும் விவகாரத்தில் அத்தை கனிமொழியுடன் ஏற்பட்ட உட்கட்சி அரசியல் போட்டியின் காரணமாகவே உதயநிதி அங்கு சென்று வந்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசியுள்ளார்.

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க கனிமொழி, கே.எஸ்.அழகிரி, உதயநிதி என வரிசையாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அங்கு சென்று வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இவர்களால் எப்படி சென்னையில் இருந்து சாத்தான்குளம் செல்ல முடிந்தது என கேள்வி எழுப்பி சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். சாதாரண மக்கள் இ பாஸ் கோரி பல நாட்களாக காத்திருந்தும் கிடைக்காத நிலையில் அழகிரி, கனிமொழி மற்றும் உதயநிதிக்கு மட்டும் உடனுக்குடன் எப்படி இ பாஸ் கிடைத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் கனிமொழி மற்றும் உதயநிதி எப்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்று வந்தனர் என்று தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதனால் உதயநிதி, கனிமொழி மற்றும் கே.எஸ்.அழகிரியின் சாத்தான்குளம் பயணம் சர்ச்சையானது. இது குறித்து கனிமொழி மற்றும் கே.எஸ்.அழகிரி வாய் திறக்காமல் அமைதியாக உள்ளனர். ஆனால் உதயநிதி மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து வருகிறார். சீமானை பெயரை குறிப்பிடாமல் விலை போனவர் என்று அந்த ட்வீட்டில் உதயநிதி கூறியுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் கூறுகின்றனர்.

இதற்கு சீமான் காட்டமாக பதில் அளித்துள்ளார். நான் பத்து நாட்களாக இ பாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு இ பாஸ் கொடுக்காமல் ரிஜெக்ட் செய்துவிடுகிறார்கள். ஆனால் சகோதரி கனிமொழி, தம்பி உதயநிதிக்கு உடனடியாக இ பாஸ் கிடைக்கிறது. அண்ணன் கே.எஸ்.அழகிரி கூட இ பாஸ் பெற்றே சாத்தான்குளம் சென்று வந்ததாக கூறுகிறார்கள். இவர்களுக்கு மட்டும் எப்படி அத்தியாவசிய தேவையில்லாமல் இ பாஸ் கிடைக்கிறது. அதிகாரிகள் தற்போதே திமுகவிற்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்துவிட்டனரா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

மேலும் சாத்தான்குளத்திற்கு செல்ல எனக்கு இ பாஸ் கிடைக்கவில்லை. அதனால் நேரில் சென்று என்னால் ஆறுதல் கூற முடியவில்லை. உதயநிதி என்ன உண்மையில் ஆறுதல் கூறவா சாத்தான்குளம் சென்றனார். உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்வது யார் என்று மக்களுக்கு தெரியும். அத்தை கனிமொழியுடன் இருக்கும் உட்கட்சி அரசியல் போட்டியால் தான் உதயநிதி சாத்தான்குளம் சென்று வந்துள்ளார். என கூறி சீமான் முடித்துக் கொண்டார். சாத்தான்குளம் விவகாரத்தில் கனிமொழி ஸ்கோர் செய்ததை திமுக மேலிடத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று ஏற்கனவே நாம் எழுதியிருந்தோம்.

தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளிப்படையாகவே இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார். திமுகவிலும் கூட இப்படி ஒரு சூழலில் கனிமொழி அங்கு சென்று வந்த நிலையில் எதற்காக உதயநிதி இப்படி சென்று வர வேண்டும் என்று முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர்.

click me!