
ஜெயலலிதாவின் அதிகார நிழலில் வளர்ந்த சசிகலாவின் குடும்பம் செல்வச்செழிப்பில் குதூகழிக்கும் வண்ணம் பணத்தை அள்ளிக் குவித்த நிறுவனம் மிடாஸ் எனும் மது தொழிற்சாலை. அதற்கு சமீபத்தில் ஆப்பு வைக்கப்பட்டிருப்பதுதான் சசி குடும்பத்தை அல்லாட வைத்திருக்கிறது.
மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ் சசி குடும்பத்தின் பலமான சொத்து. 2002ல் துவங்கப்பட்ட இந்த ஆலையின் இயக்குநர்களாக இருப்பது சசியின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவதியின் கணவரான டாக்டர் சிவக்குமார். மற்றும் இளவரசியின் மகள் ஷகீலாவின் கணவரான கார்த்திகேயன் இருவரும்.
படப்பையில் அமைந்திருக்கும் இங்கிருந்து ஜெயலலிதா ஆண்ட காலத்திலும், சசியை எடப்பாடி அணி விலக்கி வைக்காத காலத்திலும் தேவைக்கு அதிகமாகவே கொள்முதல் செய்தார்களாம் டாஸ்மாக்கிற்காக.
ஆனால் அதிகாரம் கை மாறும் போது காட்சிகளும் மாறுமல்லவா! அந்த வகையில் சமீபத்தில் சசி சொத்துக்களின் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தியபோது 5 நாட்களுக்கும் மேலாக மிடாஸையும் வெச்சு செய்திருக்கிறார்கள். ரெய்டு முடிந்து இருபது நாட்களாகியும் அது திறக்கப்படவேயில்லை.
அங்கிருந்து சரக்கு வாங்குவதை சுத்தமாக நிறுத்தியும் விட்டதாம் டாஸ்மாக் நிர்வாகம். இது சசி மற்றும் தினகரன் அணியை பொருளாதார ரீதியில் முடக்கும் செயல் என விமர்சிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தினகரன் தரப்பும் இதையே சொல்கிறது. “ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதிலிருந்தே மிடாஸுக்கு குறி வைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக கொள்முதலை நிறுத்தியவர்கள் இப்போது அடியோடு நிறுத்திவிட்டனர். 2019 வரை எங்களுக்கு லைசென்ஸ் இருக்கும்போது எப்படி கொள்முதலை நிறுத்துவார்கள்? இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் போகப்போகிறோம்.” என்கிறார்கள்.
கத்தியெடுத்தவன் கத்தியாலே வீழ்வான்! என்பார்கள். அதேபோல் அதிகாரத்தில் இருக்கும் போது ஆடிய சசி குடும்பம் இன்று அதிகாரத்தை இழந்ததால் தள்ளாடுகிறது.
மிடாஸ் சப்ளை செய்த சாராயத்தை குடித்துக் குடித்து எத்தனை பேர் செத்து, எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்ததோ! அவர்களின் சாபங்கள்தான் இப்படி மிடாஸ முடக்கிவிட்டதோ?! என்றும் மர்மப்புன்னகை வீசி கேட்கின்றனர் விமர்சகர்கள்.