கலைந்தது சசிகலாவின் 33 வருட கனவு.. கடைசி நம்பிக்கையும் போச்சே.. தலையில் கை வைத்த சின்னம்மா.

By Ezhilarasan BabuFirst Published Nov 24, 2021, 7:12 PM IST
Highlights

அதைத் தொடர்ந்து, சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது, அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அவருக்கு அற்றுபோய் விட்டது. ஒரு கட்டத்தில் கட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை, இறுதியில் தோட்டமும் கைவிட்டுப் போய்விட்டது என நொறுங்கிப் போனார் சசிகலா. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு மற்றவர்களுக்கு எப்படியோ, சசிகலாவுக்கு பேரிடியான தீர்ப்பு என்றே சொல்லாம். கட்சியை இழந்து, அதிகாரம் இழந்து  தவித்து வரும் நிலையில், 33 ஆண்டுகள் ஜெவுடன் அக்கா தங்கை என பாராட்டிவந்த உறவும், ஜெவின் வாரிசு என்ற அந்தஸ்தும் இப்போது இல்லாமல் போய்விட்டது என்பதுதான் சோகம். ஜெ வாரிசு தீபா, தீபக் என்பதை நீதிமன்றமே இன்று அழுத்தம் திருத்தமாக தன்னுடைய தீர்ப்பில் சொல்லிவிட்டது... போயஸ் தோட்ட இல்லமும் சசிகலாவின் பயணமும் ஒரு பார்வை:- 

ஒரு சாதாரண நடுத்தரன குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து தமிழகத்தையே ஆட்சி செய்த ஒரு சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி என்ற நிலைக்கு உயர்ந்து, அதிமுக என்ற அரசியல் சாம்ராஜ்யத்தை  நிழலாக இருந்து 33 ஆண்டுகள் கட்டி ஆண்டவர் சசிகலா. இவரின் வாழ்க்கை பயணம்  நம்பமுடியாத திருபங்களையும் ஏற்ற இறக்கங்களை கொண்டது. கடலூர் மாவட்ட அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த மா. நடராசன் மனைவிதான் சசிகலா. 1984ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள பீமண்ணா தோட்ட தெருவில் வினோத் வீடியோ விஷன் என்ற வீடியோ கடையை வைத்திருந்தவர் சசிகலா, அப்போது கடலூரில் நடந்த ஜெயலலிதாவின் கூட்டத்தை வீடியோ பதிவு செய்யும் ஆர்டர் அம்மாவட்ட ஆட்சியர் சந்திரலேகா பரிந்துரையின்பேரில் வினோத் வீடியோ விஷனுக்கு கிடைத்தது. இப்படித்தான் ஜெயலலிதாவுடன் முதல்முறையாக அறிமுகமானார் சசிகலா.ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன்-கிருஷ்ணவேணி தம்பதியரின் மகளாக பிறந்தவர் அவர். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார் சசிகலா,

1984ல் ஜெயலிதாவுக்கு அறிமுகமான சசிகலா மெல்ல மெல்ல அவரின்  நம்பிக்கைக்குரியவர் ஆனார். ஜெ மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது டெல்லிக்கு அவருடன் சென்றது முதல் இருவருக்கும் இடையேயான நட்பு எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு பன்மடங்கு அதிகமானது. பிறகு 1988ல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட கார்டன் இல்லத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார் சசிகலா. காலப்போக்கில் நகமும் சதையுமாக மாறினர். 1993-ஆம் ஆண்டு முதல் முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற போது அவருக்கு எல்லாமுமாக இருந்தது சசிகலாவின் குடும்பம். அப்போது முதல் ஜெயலலிதா அம்மா என்றும், சசிகலா சின்னம்மா என்றும் கட்சித் தொண்டர்களால் அழைக்கப்பட்டனர். ஜெயலலிதா செல்லும் இடமெல்லாம் நிழலாக தொடர்ந்தார் அவர். சசிகலாவின் குடும்பம் மற்றும் அவர்களது சகோதரர்களின் ஆதிக்கம் அதிமுக முழுவதும் படர்ந்தது.

ஜெயலலிதா தனது முதல் ஆட்சி காலத்தில் மக்களால் அதிக அளவுக்கு வெறுக்கப்பட்டதற்கு சசிகலா குடும்பத்தினரே காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தூக்கி எறியப்பட்டனர். அதன் பின்னணியில் சசிகலாவே இருந்தார். அதான் பிறகு 1996ல் ஆட்சி பறிபோன பிறகு ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் சேர்த்தை சிறை தண்டனை கிடைத்தது. சசிகலாவை சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைக்க முடிவு செய்தார் ஜெயலலிதா. ஆனால் அந்த பிரிவு ஒரு சில நாட்களே இருந்தது. வெகு சீக்கிரத்திலேயே மீண்டும் போயஸ் தோட்டத்திற்குள் நுழைந்தார் சசிகலா. 2011 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தனக்கு எதிராக சசிகலா குடும்பத்தினர் செயல்படுவதாக கூறி  அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார். அப்போது போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறினார் சசிகலா. பின்னர் 2012ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று உருக்கமாக மன்னிப்பு கடிதம் எழுதினார் சசிகலா, பின்னர் மார்ச்  31ஆம் தேதி சசிகலாவை மட்டும் போயஸ் தோட்ட இல்லத்தில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா.

பின்னர் ஜெயலலிதா மறையும்வரை அவர் போயஸ் தோட்டத்திலேயே இருந்தார். சசிகலா அதிமுகவுக்கு நெருக்கடியான நேரங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பவராகவும், தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்பவராகவும், ஜெ முதல்வர் பதவி வகிக்க முடியாது போனபோது அந்த இடத்திற்கு நம்பிக்கைக்குரிய ஓ. பன்னீர் செல்வத்தை முன்மொழிந்தவராகவும் மிகப்பெரும் நிழல் அதிகாரமாகவே செயல்பட்டார் சசிகலா. 2016 இல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் குடும்பத்தினரே மருத்துவமனையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வேறு யாராலும் அவரை சந்திக்க முடியாத நிலையி இருந்தது பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது தூக்கி எறியப்பட்ட சசிகலாவின் குடும்பத்தினர் அவரின் இறுதி நிகழ்ச்சியில் உடலைச் சுற்றி நின்றது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு திடீரென ஓ. பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தம் தொடங்குவாதக அறிவித்தார். பின்னர் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவளுக்கு கோரிக்கை விடுத்தார் சசிகலா, ஆனால் ஆளுநர் அழைக்கவே இல்லை.

பின்னர் இரு கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கிவிட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார் சசிகலா. அவர் சிறைக்கு சென்றதுடன் அனைத்தும் தலைகீழாக மாறியது, யாரை நம்பி ஆட்சி கொடுத்துவிட்டு சென்றாரோ தனது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதுவார் என்று சசிகலா கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இப்போது தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறு அவர் கண்ணீர் வடிக்கிறார். ஆனால் கதைக்காகவில்லை, இதனால் கட்சியை மீட்க ஆதரவு கேட்டு தொண்டர்களை சந்தித்து வருகிறார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் போயஸ் தோட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலாவுக்கு அன்று முதலமைச்சராக இருந்த எடப்பாடி, அதை அவசர அவசரமாக கையகப்படுத்தி அரசு நினைவிடமாக மாற்றி சட்டமியற்றினார். போயஸ் தோட்டம் வேதா இல்லம் இருந்தால்தானே சசிகலா வருவார்? உரிமை கோருவார்? பிரச்சனை செய்வார். அதை இல்லாமல் செய்துவிட்டால் என்ன செய்வார் என்பதனால் எடப்பாடி அப்படி ஒர் முடிவை எடுத்தார். அப்போதே சசிகலாவுக்கு பல் பிடுங்கப்பட்டு விட்டது.

அதைத் தொடர்ந்து, சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது, அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அவருக்கு அற்றுபோய் விட்டது. ஒரு கட்டத்தில் கட்சியும் இல்லை, ஆட்சியும் இல்லை, இறுதியில் தோட்டமும் கைவிட்டுப் போய்விட்டது என நொறுங்கிப் போனார் சசிகலா.  33 ஆண்டுகள்,  ஒன்னரை கோடி அதிமுக தொண்டர்களின் ஒப்பற்ற தலைவியின் நிழலாக, மனசாட்சியாக,  கை காட்டுபவர்கள் அமைச்சர் என அதிகாரத்தை கட்டி ஆண்ட சசிகலா ஒருகட்டத்தில் நிராயுதபாணியாக நின்றார். ஜெயலலிதா மறைந்த கையோடு இதோ சொத்துக்கு வாரிசு நாங்கள் இருக்கிறோம், வாரிசு இருக்கும் போது எப்படி அரசுடமை ஆக்கப்படும் என சட்டப் போராட்டத்தில் இறங்கினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்  தீபா அண்ணன் மகன் தீபக்,

இப்போது நீதிமன்றம் அதில் பரபரப்பு தீர்ப்பு கொடுத்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில் அரசுடைமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என அறிவித்துள்ளது. மேலும், 3 வார காலத்திற்குள் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அவரது வாரிசுகளான தீபா, தீபக் இடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அனைத்தும் கைவிட்டு போன நிலையில் ஜெயலலிதாவின் வாரிசு என்ற அந்தஸ்தில் மீதி காலத்தை கழித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு இப்போது அது வும் இல்லாமல் போயுள்ளது. 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவை அக்கா அக்கா என்று அழைத்து வந்த சசிகலா ஜெயலலிதா அக்கா- தங்கை பந்தத்தை இன்றைய நீதிமன்ற உத்தரவு நீர்க்குமிழி ஆகியுள்ளது. 
 

click me!